ஏரியில் மிதக்கும் கழிவுகள், ஆகாய தாமரையை முழுமையாக அகற்ற நடவடிக்கை கலெக்டர் உறுதி


ஏரியில் மிதக்கும் கழிவுகள், ஆகாய தாமரையை முழுமையாக அகற்ற நடவடிக்கை கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 30 March 2018 4:15 AM IST (Updated: 30 March 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

மேலத்திக்கான் ஏரியில் மிதக்கும் கழிவுகள், ஆகாய தாமரையை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை சாரோன் அருகில் மேலத்திக்கான் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகில் மதினா நகர், ராமகிருஷ்ணா நகர், அருணாசலம் நகர் என 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் தனியார் கல்லூரி, 2 தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக நகர பகுதியில் உள்ள கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி மாசடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து பொதுமக்களின் புகாரை தொடர்ந்து ஏரியில் செத்து மிதந்த மீன்கள் மற்றும் ஆகாய தாமரையை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இந்த பணியினை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்த அதிகாரிகள் ஆகாய தாமரை மற்றும் இறந்த மீன்கள் அகற்றப்பட்ட இடங்களை மட்டும் காண்பித்து அழைத்து சென்று விட்டதாகவும், குடியிருப்பு இருக்கும் பகுதிக்கு கலெக்டரை அதிகாரிகள் அழைத்து வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நேற்று காலை மேலத்திக்கான் ஏரியின் அருகில் உள்ள தெருக்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் பங்களாவிற்கு சென்று, கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் குடியிருப்பின் அருகில் உள்ள மேலத்திக்கான் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், ஏரி மாசடைந்து அதில் உள்ள நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் தங்கள் (கலெக்டர்) தலைமையில் மேலத்திக்கான் ஏரி ஆய்வு செய்யப்பட்டதாக வந்த செய்தியை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சீர் செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடியிருப்புகள் உள்ள பகுதிக்கு அருகில் சீர் செய்யாமல் உள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம்.

2 ஆண்டிற்கு முன்பு கழிவுநீர் கலக்காமல் இருந்த போது ஏரி சுற்றுப்புற சூழல் சீர்கெடாமல் இருந்தது. எனவே, இந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஏரியை தூய்மை செய்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக உதவி கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உடனடியாக மேலத்திக்கான் ஏரி பகுதிக்கு சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் அலுவலர்கள் மேலத்திக்கான் ஏரி பகுதிக்கு சென்று, குடியிருப்பு பகுதி இருக்கும் ஏரிக்கரை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஏரியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகள், கழிவுகள் மிதக்கும் ஏரி பகுதி, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களையும் பார்வையிட்டார்.

பின்னர் உதவி கலெக்டர் கூறுகையில், கலெக்டர் உத்தரவின்பேரில் ஏரியை தற்போது பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, ஏரியில் மிதக்கும் கழிவுகள் மற்றும் ஆகாய தாமரை போன்றவை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஏரியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

Next Story