சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள்


சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 30 March 2018 4:00 AM IST (Updated: 30 March 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என கோரி, மீனவர் சங்க உறுப்பினர்கள் நேற்று மீன்பிடிக்கும் வலைகளுடன் தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம்,

தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதையொட்டி அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் வேட்பு மனு தாக்கல்கள் நடைபெற்று வருகிறது. தாராபுரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் 130 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலையொட்டி கடந்த 26-ந்தேதி புதுக்காவல் நிலைய வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதில் மொத்தம் 41 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து 27-ந்தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில், 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 26 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டனர். இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மீனவர் கூட்டுறவு சங்கத்தேர்தலில் முறைகேடு நடப்பதாகவும், முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என கோரி, மீனவர் சங்க உறுப்பினர்கள் நேற்று மீன்பிடிக்கும் வலைகளுடன் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதாவது.

மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலை தேர்தல் அதிகாரிகள் முறையாக நடத்துவதில்லை. சிபாரிசின் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து விடுகிறார்கள். இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் எந்த பயனும் இருப்பதில்லை.

இந்த முறை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 7 பேரை அதிகாரிகள் நியமனம் செய்து அவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இந்த 7 பேரில் 2 பேர் மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளவர்களை எப்படி அதிகாரிகள் நிர்வாகக்குழுவில் நியமிக்க முடியும். தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு, கூட்டுறவு சங்க உறுப்பினர் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த முறை எங்களுடைய கூட்டுறவு சங்கத்திற்கு வேட்பாளர் இறுதி பட்டியலை அறிவித்து, நியமனம் இல்லாமல் முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. எனவே தற்போது அதிகாரிகளால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களை உடனே நீக்க வேண்டும். தேர்தல் மூலம் மட்டும் தான் நல்ல நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க முடியும். எனவே தேர்தல் அதிகாரிகள் தன்னிச்சையான நடவடிக்கையை கைவிட்டு, தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து, சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்று கூறினார்கள்.

நேற்று அரசு விடுமுறை என்பதால் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. இருப்பினும் முற்றுகையில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடம் அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, விடுமுறைக்கு பிறகு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, முற்றுகை போராட்டத்தை மீனவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story