காஞ்சீபுரத்தில் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.53½ லட்சத்தில் பண்ணை கருவிகள்


காஞ்சீபுரத்தில் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.53½ லட்சத்தில் பண்ணை கருவிகள்
x
தினத்தந்தி 30 March 2018 3:19 AM IST (Updated: 30 March 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.53 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் பண்ணை கருவிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர்களுக்கு பண்ணை கருவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்துகொண்டு மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் வட்டங்களில் உள்ள குழுக்களில் இருந்து கூட்டுப்பண்ணைய திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.53 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான பண்ணை கருவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

வாழ்வாதாரத்தை மேம்படுத்த குழுக்கள்

உணவு தானிய உற்பத்தியை பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் வகையிலும் அரசு பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.

சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களை குழுக்களாக இணைத்து செயல்பட வைக்கும் பொருட்டு கூட்டுப்பண்ணையத்திட்டம் நடப்பு ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களிலும் 5 ஆயிரத்து 600 சிறு, குறு விவசாயிகள் இவ்வாறு குழுக்களாக இணைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 100 பேர் வீதம் 56 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளனர். 56 குழுக்களுக்கு ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் தொகுப்பு நிதி

இந்த உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியளித்து, அதை கொண்டு விவசாயிகள் விருப்பத்துக்கு ஏற்ப பண்ணை கருவிகள் வாங்கி அதை குழுவில் உள்ள 100 விவசாயிகளும் கூட்டாக உபயோகித்து கொள்ளும் வகையில் அரசு சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர் குழுவில் ஒரு பருவத்தில் ஒரே பயிர், ஒரே ரகம், அதிக பரப்பில் சாகுபடி செய்ய திட்டமிட்டு, இடுபொருட்கள் வாங்குவதில் இருந்து, மதிப்பீட்டின்படி வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது வரை கூட்டாக செயல்படுவதும், உயர் தொழில்நுட்பங்களை ஒருசேர கடைபிடிக்கவும், அரசு மானிய திட்டத்தில் எளிதில் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 56 குழுக்களில் உள்ள விவசாயிகள் 17 வகையான டிராக்டர், பவர்டில்லர், வைக்கோல் கட்டும் கருவி போன்ற பண்ணை கருவிகள் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, வேளாண்மை இணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) லதா பானுமதி, கூட்டு பண்ணைய திட்டத்துக்கான நோடல் அலுவலர் மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்)கரோலின், தோட்டக்கலைத்துறை இயக்குனர் இம்மானுவேல் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story