கெங்கவல்லியில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு: துள்ளிக்குதித்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்
கெங்கவல்லியில் முதல்முறையாக நடந்த ஜல்லிக்கட்டில் துள்ளிக் குதித்த காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர்.
கெங்கவல்லி,
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஆனால் அரசின் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து இந்த ஆண்டு பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் ஒன்றிணைந்து கெங்கவல்லியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முதல்முறையாக அரசாணை பெற்றனர். இதையடுத்து, நேற்று கெங்கவல்லியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பாஷா குட்டை என்ற இடத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் போட்டியில் பங்கேற்க மாட்டு உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். அந்த மாடுகளை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பரிசோதித்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களில் 550 பேர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
துள்ளிக்குதித்த காளைகள்
ஜல்லிக்கட்டு மைதானத்தில் தென்னைநார்கள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு கம்பிகள் கட்டப்பட்டும் இருந்தன. விழாவை பார்க்க பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து காலை 9.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்தனர். மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், ஜல்லிக்கட்டு விழாவை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. இந்த காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர், பிற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில காளைகளின் திமிலை இளைஞர்கள் பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர். சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோஷமாக ஓடியது.
போலீஸ் பாதுகாப்பு
போட்டியில், காளை களத்துக்கு வரும் முன்பே, காளையை அடக்கினால் தங்ககாசு, வெள்ளிகாசு, சைக்கிள், குத்துவிளக்கு, செல்போன், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காளையை அடக்கிய வீரர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
ஜல்லிக்கட்டை பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கை தட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்து ரசித்து பார்த்தனர். ஜல்லிக்கட்டையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
44 பேர் காயம்
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 53), கலைநாதன் (23), செந்தாரப்பட்டியை சேர்ந்த பாபு (25), பூலாம்பாடியை சேர்ந்த வசந்தகுமார் (24), ரவி (34) உள்பட 44 பேர் காயம் அடைந்தனர். இதில் லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த ஆரோக்கியசாமி, பாபு ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டில், சிறந்த மாட்டுக்கான விருதை தம்மம்பட்டி அருகே உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்த வேலு என்பவர் பெற்றார். இவருக்கு மோட்டார் சைக்கிளை பரிசாக ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் வழங்கினார். அப்போது கெங்கவல்லி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராஜா, பேரூர் செயலாளர் சிவபிரகாசம் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் சுந்தராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story