சென்னையில் இருந்து 18 வருடங்களுக்கு பின்னர் கொல்லத்துக்கு ரெயில்


சென்னையில் இருந்து 18 வருடங்களுக்கு பின்னர் கொல்லத்துக்கு ரெயில்
x
தினத்தந்தி 30 March 2018 4:56 AM IST (Updated: 30 March 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து 18 வருடங்களுக்கு பின்னர் மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

மதுரை,

1904-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் (கொல்லம் மெயில்) மதுரை, விருதுநகர், செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றது.

பின்னர் கொல்லம்-திருவனந்தபுரம் இடையே மீட்டர்கேஜ் பாதை போடப்பட்ட பின்னர் 1918-ம் ஆண்டு முதல் இந்த ரெயில் திருவனந்தபுரம் வரை நீடிக்கப்பட்டது. பின்னர் அகல ரெயில்பாதை பணிக்காக திருவனந்தபுரம்-கொல்லம் இடையேயான ரெயில் சேவை 2000-வது வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்த பாதை 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்டு அகல ரெயில்பாதையில் திருவனந்தபுரம்-கொல்லம் இடையே ரெயில்கள் இயக்கப்பட்டன.

கொல்லம்-செங்கோட்டை இடையே மீட்டர் கேஜ் ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் திட்டத்துக்கு 1998-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் கொல்லம்-புனலூர் இடையே உள்ள 44 கி.மீ. தூர ரெயில்பாதையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து கடந்த 2010-ம் ஆண்டு முதல் அந்த பாதையில் போக்குவரத்து தொடங்கியது.

புனலூர்-செங்கோட்டை இடையேயான 49 கி.மீ. ரெயில்பாதையில் 2010-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தன. இதில் ஆரியங்காவு-புளியரை(கோட்டவாசல்) இடையே 680 மீட்டர் நீளம் உள்ள குகைப்பாதை ரெயில்வேக்கு பெரும் சவாலாக அமைந்தது.

இந்த சவாலை கடந்து பணிகள் நிறைவுற்ற நிலையில், செங்கோட்டை-புனலூர்-கொல்லம் பாதை தயாராக உள்ளது.

இதையடுத்து, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை தாம்பரத்தில் இருந்து 18 வருடங் களுக்கு பின்னர் கொல்லத்துக்கு ரெயில்சேவை தொடங்குகிறது.

இந்த ரெயில் சிறப்புக்கட்டண ரெயிலாக இன்று தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு செங்கோட்டையையும், காலை 10.30 மணிக்கு கொல்லத்தையும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 1 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 8.40 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

இந்த ரெயிலில் ஒரு 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகள், 3 பொதுப்பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Next Story