அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும்


அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 March 2018 5:03 AM IST (Updated: 30 March 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா மாவட்டத்தில் மிகப்பெரிய தாலுகாவாக உள்ளது. இந்த தாலுகாவில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவாசாயத்தையும், மீன் பிடித்தொழிலையும் நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் வறுமை கோட்டிற்குகீழ் வாழும் பொதுமக்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர். இப்பகுதி மக்கள் திருவாடானையில் உள்ள தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் தான் அவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இங்கு 5 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். ஆனால் மகப்பேறுக்கு பெண் மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு சிரமப்படுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்க்க நேரிடுகிறது. ஏழை, எளிய மக்கள் பிரசவத்திற்காக அதிகஅளவு பணத்தை செலவு செய்ய வேண்டிஉள்ளது. அப்படியே செலவு செய்தாலும் பெரும்பாலான பிரசவம் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகிறது.

இப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஏராளமான பிரசவம் அறுவை சிகிச்சை இல்லாமல் சுகப்பிரசவமாக நடைபெற்று வருகிறது. இங்கு போதிய படுக்கை, கட்டிட வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் அசவுகரியமாக கருதுகின்றனர். தாலுகா தலைமை மருத்துவ மனையில் அவசர காலத்திற்கு உரிய அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இங்கு மகப்பேறுக்கு பெண் மருத்துவர் இல்லை. இதனால் இங்கு இருந்த மகப்பேறு மருத்துவ உதவியாளர் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மாற்று பணியாக பணிபுரிந்து வருகிறார்.

பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் வருவதில்லை. இதனால் தாலுகா தலைமை மருத்துவ மனையில் நீண்டகாலமாக பிரசவம் நடைபெறாமல் உள்ளது. இப்பகுதி கர்ப்பிணிகள் தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் போன்ற வெளியூர்களுக்கு சென்று தனியார் மருத்துவமனையில் அதிக பணம் செலவு செய்து பிரசவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முதல்-அமைச்சர் மற்றும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து திருவாடானை தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்கு பெண் மருத்துவரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள், மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story