புதுவை நகராட்சி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை


புதுவை நகராட்சி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை
x
தினத்தந்தி 30 March 2018 5:49 AM IST (Updated: 30 March 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நகராட்சி பகுதியில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

புதுச்சேரி அரசும், மத்திய அரசும் சேர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்ட பயனாளிகளை கண்டறிந்து ரூ.20 ஆயிரம் மானியமாக அளித்து வருகிறது. மேலும் தேவைப்படும் இடங்களில் பொது மற்றும் சமுதாய கழிப்பிடங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

புதுவை முழுவதும் திறந்தவெளி கழிப்பிடங்கள் பயன்படுத்தாவண்ணம் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன்படி புதுச்சேரி நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 35 வார்டுகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை கட்டுவதற்கான பணி நடந்து வரும் நிலையில் ஸ்தல விசாரணையில் புதுச்சேரி நகராட்சி எல்லையில் உள்ள வம்பாகீரப்பாளையம், கோலாஸ் நகர், நேதாஜி நகர், வாணரப்பேட்டை, தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம், கொம்பாக்கம் ஆகிய 7 வார்டுகளில் எந்த நேரத்திலும் திறந்தவெளியில் கழிப்பறை உபயோகிப்பது இல்லை என்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட இந்த 7 வார்டுகளும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத வார்டுகளாக அறிவிக்கப்படுகின்றன. இதன்படி புதுச்சேரி நகராட்சியில் உள்ள 42 வார்டுகளும் தற்போது திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story