இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 30 March 2018 5:51 AM IST (Updated: 30 March 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

புனித வெள்ளியை முன்னிட்டு இன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

புதுச்சேரி,

ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் உயிர்ப்பு பெருவிழாவிற்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். அந்த நாட்களில் உபவாசம் மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்க்கும் கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். தவக்காலத்தின் இறுதியில் வரும் வியாழக்கிழமையை புனித வியாழன் என்றும், வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமை என்ற பெயரில் துக்க தினமாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயத்தில் நேற்று மாலை புனித வியாழன் நிகழ்வுகள் நடந்தது. ஏசு தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி பணிவிடை புரிந்ததை நினைவுக்கூரும் வகையில், புதுவை-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் 12 விசுவாசிகளின் பாதங்களை கழுவினார். தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணி வரை ஆராதனைகள் நடந்தன. இதேபோல் புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) காலை மும்மணி நேர தியான ஆராதனை தொடங்குகிறது. அப்போது 7 திருவசனத்தின் அடிப்படையில் 7 பேர் அருளுரை வழங்குகின்றனர்.

நாளை (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஏசு உயிர்ப்பு பெருவிழா சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.

Next Story