நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர்


நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர்
x
தினத்தந்தி 30 March 2018 11:45 AM IST (Updated: 30 March 2018 10:56 AM IST)
t-max-icont-min-icon

இன்று (மார்ச் 30-ந்தேதி) “நாட்குறிப்பு வேந்தர்” ஆனந்தரங்கப் பிள்ளையின் பிறந்த நாள்.

புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டின் சார்பில் புதுச்சேரியை ஆண்ட கவர்னர்களில் குறிப்பிடத் தக்கவர் துய்ப்ளெக்சு ஆவார். அவரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவருடைய எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் ஆனந்த ரங்கப் பிள்ளை ஆவார். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ரங்கப்பிள்ளை கவர்னர் துய்ப்ளெக்சின் தலைமைத் துவிபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர். அக்காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட பல மன்னர்களோடு தொடர்பு வைத்திருந்தவர். பிரெஞ்சிந்திய ஆட்சிக் காலத்தின் 18-ம் நூற்றாண்டின் நிலையைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இவர் எழுதிய “ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு” என்பது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட இவரின் நாட்குறிப்பு புதுச்சேரி மாநிலத்தின் அரசியல், சமூகம், பண்பாடு சமயசூழல் முதலானவற்றை வெளிப்படுத்துகிறது.

1709-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி சென்னை பெரம்பூரில் ஆனந்தரங்கர் பிறந்தார். புதுச்சேரியில் தரகராய் இருந்த ஆனந்தரங்கரின் தாய்மாமன் நைனியப்பப் பிள்ளை ஆனந்தரங்கரின் தந்தையாராகிய திருவேங்கடம் பிள்ளையைப் புதுச்சேரிக்கு வரவழைத்தார். அவர்தன் மகன் ஆனந்தரங்கரோடு புதுச்சேரி வந்தார். 1726-ம் ஆண்டில் திருவேங்கடம்பிள்ளை புதுச்சேரியில் இறந்த போது ஆனந்த ரங்கருக்கு வயது 17 ஆகும். புதுச்சேரியில் ஆனந்தரங்கர் துவிபாசி ஆவதற்கான சூழல்கள் பெருகின. தன்னுடைய அறிவால் பிரெஞ்சு கவர்னர்களின் கவனத்தை ஈர்த்தார். பிரெஞ்சு கவர்னர்களுக்குத் துவிபாசியாகப் பணியாற்றிய கனகராய முதலியார் இறந்தபின்பு ஆனந்தரங்கர் 12-2-1746 முதல் துய்ப்ளெக்சின் துவிபாசியாகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவர் முறைப்படி 1748 -ம் ஆண்டு ஜூலை மாதம்தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

தலைசிறந்த வணிகராகத் திகழ்ந்த ஆனந்தரங்கர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,சமஸ்கிருதம் போர்த்துகீசியம் முதலான மொழிகளை நன்கு அறிந்தவர். கணக்கு, கடிதம், ரசீது, விண்ணப்பம், பத்திரம், முதலான எல்லாவற்றையும் நகலெடுத்துப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கும் வழக்கத்தை இவர் மேற்கொண்டிருந்தார். நவாப்புகளிடமிருந்து வரும் பார்சிக் கடிதங்களையும் பிறரிடமிருந்து வரும் பிரெஞ்சு, தெலுங்கு, தமிழ் முதலான கடிதங்களையும் படியெடுத்து வைப்பது இவரது வழக்கமாகும். இச்சிறந்த பண்பு நலன்தான் ஆனந்தரங்கரை லெனுவார், துய்மா மற்றும் துய்ப்ளெக்சு ஆகிய பிரெஞ்சு கவர்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஆக்கியது. அரசியல் சாணக்கியராக விளங்கிய ஆனந்தரங்கர் பிரெஞ்சு கவர்னர்களுக்குத் தெரியாமல் அன்றாடம் புதுச்சேரியில் அவர் காலத்தில் நடைபெற்ற அரசியல் உள்ளிட்ட அனைத்து நிகழச்சிகளையும் டைரியில் எழுதி பதிவு செய்தார் . இதுவே ஆனந்தரங்கரின் நாட்குறிப்பாகும். இந்த நாட்குறிப்பே புதுச்சேரி மாநில வரலாற்றில் 18-ம் நூற்றாண்டின் புதுச்சேரியின் வரலாற்றைத் தெளிவாக விளக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது.

தன்னுடைய 29 வயதிலிருந்து நாட்குறிப்பை எழுதத்தொடங்கிய ஆனந்தரங்கர் தான் இறப்பதற்கு முதல்நாள்வரை எழுதியிருக்கிறார். நமக்குக் கிடைத்த வகையில் 1736- ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் நாட் குறிப்பை எழுதத்தொடங்கியவர் 11.1.1761 வரை நாட் குறிப்பை எழுதி முடித்திருக்கிறார். இவரது இந்த நாட்குறிப்பு பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. தான் இறந்த அன்று(12.1 .1761) காலையில் கூடத் தன் மருமகனுக்கு எழுதிய ஒரு பரிந்துரைக் கடிதத்தில் கையொப்பம் இட்ட பின்னரே இறந்துபோனார்.

ஆனந்த ரங்கரின் முதல்நாள் நாட்குறிப்பு பின்வருமாறு தொடங்குகிறது

“ தமிழ் நள வருடம் ஆவணி மாதம் 25-க்கு கிறிஸ்து 1736 செப்தெம்பர் மீ 6 வியாழக்கிழமை காலமே எட்டு மணிக்கு கோசேல் பண்ணி முசே துலார்முக்கு கோன்சேல் உத்தியோகம் கொடுத்தார்கள்., நாளது மத்தியானத்துக்கு மேல் நாலரை மணிக்கு முசே துமெலியோ முசே துமாஸ் குவர்னர் துரையண்டைக்குப் போய் முசே துளோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்தில் இருப்பேன். இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்குக் கும்பனியார் உத்தியோகம் கவையில்லை என்று சொன்னான்., அதற்குத் துரையிருந்து சொன்ன உத்திரம்.,கும்பனியார் எழுதியனுப்பினபடிக்குதான் நடப்பிக்க வேணுமே யல்லாமல் அதைத் தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லை என்றுசொன்னார்” இதுதான் ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் நடை., இந்தநடை சற்றுக் கடினமான நடைதான் கூர்ந்து பார்த்தால் பொருள் எளதில் விளங்கும். இதன் எளியதமிழ்நடை இதுதான் “காலை எட்டுமணிக்கு துய்லோரான் என்பவரைப் பிரெஞ்சு வணிக நிறுவனம் கோன்சேல் என்ற பதவிக்கு நியமனம் செய்தது. இதை எதிர்த்து துபெய்லியே என்பவர் கவர்னர் துய்மாவிடம் “அவன் எனக்கு மேலதிகாரியாக இருந்து கையொப்பமிட்ட பின் நான் அவனுக்குக் கட்டுப்பட்டு கையொப்பம் இடுவதானால் நிறுவனம் கொடுத்த இந்த உத்தியோகம் தேவையில்லை என்றான்., அதற்கு கவர்னர் நிறுவனம் எழுதி அனுப்பியபடிதான் செயல்பட முடியுமே தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்றார் ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் பல இடங்கள் எளிதாக விளங்கும். சில இடங்களில் சற்றுக் கடினமாக இருக்கும். நாட்குறிப்பில் பிரெஞ்சுமொழயின் தாக்கம் பெருமளவில் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் பிறமொழிச் சொற்களும் கலந்திருக்கும்.

15-5-1740-ம் நாளைய நாட்குறிப்பு மராத்தியரின் தென்னிந்தியப் படையெடுப்பை விரிவாகக் கூறுகிறது. தென்னிந்தியாவில் மராத்தியர் ஏற்படுத்திய எல்லை மீறிய கொள்ளைகள்,கொலைகள் குழப்பங்கள் முதலானவற்றை விவரிக்கும் ஆனந்தரங்கர் இதனால் பொதுமக்கள் புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடிவந்ததைக் குறிப்பிடுகிறார்.

19.10.1741-ம் நாளைய நாட்குறிப்பு பிரெஞ்சு கவர்னர் துய்மா தனது பொறுப்பிலிருந்து விலகிப் பிரான்சு நாட்டிற்குச்சென்றபோது அவருக்கு அளிக்கப்பட்ட விடை கொடுத்தனுப்பும் விழாவைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. அதேபோன்று 19.1.1742 அன்று எழுதப்பட்ட நாட்குறிப்பு பிரெஞ்சு கவர்னராகப் பொறுப்பேற்கப் புதுச்சேரிக்கு வந்த துய்ப்ளெக்சு எவ்வாறு விமரிசையாக வரவேற்கப் பட்டார் என்பதை விளக்கமாகக் கூறுகிறது. இரண்டாம் தொகுதியில் பிரெஞ்சுப் படைத் தளபதி மாகி லெபூர்தொனே என்பவருக்கும், கவர்னர் துய்ப்ளெக்சுக்கும் இடையே நடைபெற்ற பனிப்போர் இடம் பெற்றுள்ளது. படைத்தளபதி லெபூர்தொனே கவர்னர் துய்ப்ளெக்சை சிறிதளவு கூட மதிக்காமல் போனதையும் ஆங்கிலேயரிடமிருந்து சென்னையை லெபூர்தொனே கைப்பற்றிய செய்தியையும் இரண்டாம்தொகுதி கூறுகிறது.

சிறந்த மதிநுட்பம் வாய்ந்தவராகவும் ராஜ தந்திரியாகவும் அரசியல் சாணக்கியராகவும் விளங்கிய ஆனந்தரங்கர் தன்து இறுதி நாட்களில் பல்வேறு துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகி உள்ளார் என்பதை அவரது நாட்குறிப்பு வெளிப்படுத்துகிறது. துய்ப்ளெக்சின் தலைமைத் துவிபாசியாகப் பதவியேற்ற நாள்முதலே துய்ப்ளெக்சின் மனைவிக்கு ஆனந்தரங்கரின் மீது ஒரு மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. அதை அவ்வப்போது துய்ப்ளெக்சு மனைவி வெளிப்படுத்தியதை ஆனந்தரங்கர் தனது நாட் குறிப்பில் வெளிப் படுத்தி உள்ளார்.புதுச்சேரி வரலாற்று நாயகர்களுக்குள் ஆனந்தரங்கருக்கு ஒரு தனியிடம் உண்டு. தன்னுடைய மதி நுட்பத்தால் பிரெஞ்சு அரசில் மிக உயர்ந்த இடத்தை, மதிப்பை, மரியாதையைப் பெற்ற இவரைப் பற்றிய இலக்கியங்களும் பல எழுதப்பட்டுள்ளன. ஆனந்தரங்கன் கோவை,ஆனந்தரங்க விஜயசம்பு,ஆனந்தரங்கர் புதினங்கள், ஆனந்த ரங்கர் தனிப்பாடல்கள், முதலான இலக்கியங்கள் இவர்மீது பாடப்பட்டுள்ளன. கி.பி .1709 மார்ச் மாதம் 30-ம் தேதி பிறந்து 1761-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வரை வாழ்ந்து மறைந்த ஆனந்தரங்கர் 52 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்து போனாலும் “நாட்குறிப்பு வேந்தர்” என்ற படித் தன் பெயரை வரலாற்றோடு இணைத்து நம்மனத்தில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

- முனைவர் ப.பத்மநாபன், புதுவை அரசின் முன்னாள் செய்தித் துறை துணை இயக்குனர்

Next Story