பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 March 2018 4:30 AM IST (Updated: 31 March 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

நாகை - செல்லூர் சாலையில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை தாமரைக்குளம் அருகில் இருந்து செல்லூர் கிழக்கு கடற்கரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலைக்கு அடுத்துள்ள செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், ஐவநல்லூர், பரங்கிநல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாகை பகுதிக்கு வரவேண்டும் என்றால் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் அருகே தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. இந்த சாலையில் பாப்பான்சுடுகாடு அருகே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த பாலத்தின் கைப்பிடி சுவர்கள் இடிந்து விழுந்தும், சிமெண்டு காரைகள் பெயர்ந்தும் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் காணப்படுகிறது.

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த பாலத்தின் வழியாகத்தான் நாகையில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரதிதாசன் உறுப்பு கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் பெரும்பாலானோர் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றனர். அவ்வாறு செல்லும் மாணவ, மாணவிகள் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளதால் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமான நிலையிலும், குண்டும் குழியுமாக காணப்பட்டதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் மோசமான இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த பாலம் சீரமைக்கப்படவில்லை. எனவே, இந்த பாலத்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்துள்ள பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story