கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்


கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல்
x
தினத்தந்தி 31 March 2018 3:11 AM IST (Updated: 31 March 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த வட பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). விவசாயி. கடந்த 25-ந்தேதி பனை மரத்தில் இருந்து கள் இறக்கியதாக துரைராஜை கூவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலவன் கைது செய்தார். பின்னர் அவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் 27-ந் தேதி இரவு 10 மணியளவில் துரைராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு நீர்சத்து குறைவு மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் துரைராஜின் மனைவி செல்வி மற்றும் அவரது உறவினர்கள் போலீசார் தாக்கியதால் தனது கணவருக்கு இந்த நிலை ஏற்பட்டது எனவும், அவரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

மறியல்

போலீசார் புகார்மனுவை ஏற்று ரசீது தரும்படியும் கோரிக்கை விடுத்தனர். போலீசார் தாமதம் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் விரைந்து வந்து புகார் மனுவை ஏற்று ரசீது வழங்குவதாக தெரிவித்தார்.

அவரிடம் பாதிக்கப்பட்ட துரைராஜிக்கு உரிய நஷ்டஈடு தர வேண்டும் எனவும், காரணமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். உரிய ரசீது வழங்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story