வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம், காவடி, அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு


வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம், காவடி, அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 31 March 2018 3:12 AM IST (Updated: 31 March 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நேற்று நடைபெற்றது. பால்குடம், காவடி, அலகு குத்தி பக்தர்கள் வழிபட்டனர்.

சென்னை,

தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாளான பங்குனி உத்திர விழா திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளில் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி கடந்த 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை லட்சார்ச்சனை பூஜைகள் நடத்தப்பட்டது. கலசங்களுடன் ஹோமங்களும், 6 கால பூஜைகளும் செய்யப்பட்டது. நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது.

முருகனுக்கு அரோகரா...

வடபழனி முருகன் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி வந்து வழிப்பட்டனர். சாலிகிராமம் தசரதபுரத்தில் இருந்து அதிகளவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முருகனை தரிசித்தனர்.

பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும் பல பக்தர்கள் வந்தனர். ஒரு பக்தர் தனது முதுகில் அலகு குத்தி காரை இழுத்து வந்தார். பக்தர்கள் பலர் பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர். ‘முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா...’ என்ற பக்தி முழக்கம் ஒலித்தபடி இருந்தது. பக்தர்களுக்கும், சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்களுக்கும் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் முருகப் பெருமான் விதி உலா நடைபெற்றது.

தெப்ப திருவிழா

வடபழனி முருகன் கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தெப்ப திருவிழா நடக்கிறது. கோவில் தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருப்பதால், நிலை தெப்பத் திருவிழாவாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) வடபழனி ஆண்டவரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சண்முகர் வள்ளி, தெய்வாணையும், 2-ந்தேதி சுப்பிரமணியர், வள்ளி, தெய்வாணையும் தெப்பத்தில் காட்சி அளிக்க உள்ளனர்.

பங்குனி உத்திரத்தையொட்டி போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் நிர்வாகமும் பக்தர்கள் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

திருவல்லிக்கேணியில் உள்ள எட்டாம் படை வீடு முருகன் கோவில், பாரிமுனை கந்தக்கோட்டம் முருகன் கோவில் உள்பட சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது. 

Next Story