காண்டிராக்டர் மனைவியை தாக்கிய பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது
காண்டிராக்டர் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திரு.வி.க.நகர்,
சென்னை ஓட்டேரி, கொசப்பேட்டை கந்தசாமி தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவர் கட்டிட காண்டிராக்டராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரிதா(வயது 35). சுகுமார் 7 வருடங்களுக்கு முன்பு பட்டாளம் பென்சனர் தெரு, ஜி- பிளாக்கை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் பாலாஜி(38) என்பவருக்கு கட்டிட வேலை செய்துகொடுத்தார்.
இதில் ரூ.3 லட்சம் வரை பாலாஜி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. சுகுமார் இந்த பாக்கியை 6 வருடங்களாக பாலாஜியிடம் தொடர்ந்து கேட்டுவந்தார்.
கொலை மிரட்டல்
பாலாஜி ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கு உள்பட ஆள்கடத்தல் மற்றும் அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 3 வழக்கு செலவுகளுக்கும் பணம் செலவாகிவிட்டது, எனவே என்னால் இப்போது பணம் தரமுடியாது. நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன். பணம் கேட்டு திரும்பவும் வந்தால் விபரீதம் ஏற்படும் என்று சுகுமாரிடம் பாலாஜி கூறினார்.
சுகுமார் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி சரிதாவுடன் பணம் கேட்க மீண்டும் பாலாஜி வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாலாஜி, சுகுமார் மற்றும் சரிதாவை கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
சிறையில் அடைப்பு
இதுபற்றி சரிதா நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது நாசரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், பாலாஜியை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்தார். இதில் அவர் கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து வழக்குபதிவு செய்த ஓட்டேரி போலீசார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story