கொள்ளை சம்பவத்தில் நகை, பணம் மீட்பு: சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு


கொள்ளை சம்பவத்தில் நகை, பணம் மீட்பு: சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
x
தினத்தந்தி 31 March 2018 3:23 AM IST (Updated: 31 March 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளை சம்பவத்தில் நகை, பணத்தை மீட்டு சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

திருப்பூர்,

அனுப்பர்பாளையம் ஜி.என்.தோட்டத்துப்பாளையம் பகுதியில் பனியன் நிறுவன உரிமையாளர் அருண்குமார் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். கடந்த 21-ந் தேதி அருண்குமார் பனியன் நிறுவனத்துக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய மனைவி, மகள் ஆகியோர் தனியாக இருந்துள்ளனர். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் பின்புறம் வழியாக வந்த ஆசாமி, ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து 39 பவுன் நகை, ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததுடன் அருண்குமாரின் மனைவியையும் தாக்கி வீட்டுக்குள் பூட்டி விட்டு தப்பி சென்றான்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கயல்விழி கண்காணிப்பில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை மேற்பார்வையில், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டுகள் காளிமுத்து, ஜெயக்குமார், சங்கரநாராயணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கொள்ளை சம்பவம் நடந்த 8 மணி நேரத்துக்குள் சிவா(வயது 40) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 39 பவுன் நகை, ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.


Next Story