பொது சொத்துகளை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் கோர்ட்டு உத்தரவு


பொது சொத்துகளை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 March 2018 3:30 AM IST (Updated: 31 March 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

பொது சொத்துகளை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.

மும்பை,

பொது சொத்துகளை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் என மும்பை கோர்ட்டு கூறியுள்ளது.

ஆசாத் மைதானம் வன்முறை

மும்பை ஆசாத் மைதானத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ந் தேதி மியான்மர் மற்றும் அசாமில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர். போலீசார் உள்பட 77 பேர் காயமடைந்தனர். பல கோடி மதிப்பிலான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதற்கு அபராதம் செலுத்துமாறு போலீசார் அகமது நூரி என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

அபராதம் செலுத்த வேண்டும்

இதை எதிர்த்து அவர் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது ஆஜரான அகமது நூரியின் வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி ‘‘ஆசாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தை அகமது நூரி ஏற்பாடு செய்யவில்லை. மேலும் அங்கு நடந்த வன்முறைக்கு பிறகு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அகமது நூரியின் பெயர் இல்லை. எனவே அவருக்கு அபராத நோட்டீஸ் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறினார்.

இதையடுத்து கோர்ட்டு அகமது நூரிக்கு எதிரான அபராத நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டது.

எனினும் இந்த மனு குறித்த விசாரணைக்கு பிறகு கோர்ட்டு கூறுகையில் “ இந்த வழக்கில் தவறு செய்தவர்களை தப்பிக்க கோர்ட்டு அனுமதிக்காது. பொது சொத்துகளை சேதப்படுத்தும் போராட்டக்காரர்கள் கட்டாயம் அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும்” என கூறியுள்ளது.

மேலும் ஆசாத் மைதானம் வன்முறையில் அபராதம் விதிப்பது தொடர்பாக புதிய முடிவினை எடுக்க மும்பை கலெக்டருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Next Story