திருப்பூர் அருகே விசுவ இந்து பரிஷத் நிர்வாகிக்கு கொலைமிரட்டல்: நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


திருப்பூர் அருகே விசுவ இந்து பரிஷத் நிர்வாகிக்கு கொலைமிரட்டல்: நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 31 March 2018 3:31 AM IST (Updated: 31 March 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே விசுவ இந்து பரிஷத் நிர்வாகிக்கு செல்போனில் கொலைமிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

கொலைமிரட்டல்

விசுவ இந்து பரிஷத் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் வசந்த்(வயது 35) மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் வசந்த் கூறியிருப்பதாவது:-

நான் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 6-ந் தேதி இரவு 10.30 மணிக்கு எனது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், கிருஷ்ணா பேசுகிறேன் என்று கூறிய அந்த நபர், தகாத வார்த்தையால் என்னை திட்டினார். உன்னை கொலை செய்ய வந்து கொண்டிருக்கிறேன்.

நீ விசுவ இந்து பரிஷத்தில் இருந்து உடனடியாக விலகு. உன்னை கொல்வதற்காக எனக்கு பப்லு, திவாரி ஆகியோர் பணம் கொடுத்துள்ளனர் என்று கூறினான். என்னை செல்போனில் மிரட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் கடந்த 13-ந் தேதி புகார் மனு கொடுத்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து எனக்கு செல்போனில் கொலைமிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

முற்றுகை போராட்டம்

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். அப்போது விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரி.குலைக்காதர் உடன் இருந்தார். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மக்களை திரட்டி ஊத்துக்குளி போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக வசந்த் கூறினார்.

Next Story