சிறுமுகை அருகே உளியூரில் விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுவதை தடுக்க அகழி வெட்டப்பட்டது, மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி


சிறுமுகை அருகே உளியூரில் விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுவதை தடுக்க அகழி வெட்டப்பட்டது, மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 March 2018 3:00 AM IST (Updated: 31 March 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை அருகே உளியூரில் விவசாய நிலத்துக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை சார்பில் அகழி வெட்டப்பட்டு உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. அவை அனைத்தும் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கிறது. ஆனாலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட உளியூர் மலைவாழ் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள், தங்கள் வீடுகளின் அருகிலேயே தோட்டங்கள் அமைத்து வாழை, கிழங்கு உள்பட பல்வேறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.

ஆனால் காட்டு யானைகள் உள்பட வனவிலங்குகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதை தடுக்க அந்த கிராமத்தை சுற்றிலும் அகழி வெட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த கிராமத்தை சுற்றிலும் ரூ.7 லட்சம் செலவில் அகழி வெட்டப்பட்டு உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோகரன் கூறியதாவது:-

‘மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், உளியூர் கிராமத்தை சுற்றிலும் 2 கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப் பட்டு உள்ளது. இதனால் அந்த கிராமத்துக்குள் வனவிலங்குகள் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கீழ் கோத்தகிரி பகுதியில் இருந்து உருவாகி சிறுமுகை வனப்பகுதி வழியாக பவானி சாகர் அணைக்கு செல்லும் உளியூர் தட்டப்பள்ளம் என்ற ஆற்றில் இருந்து அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பாசனம் செய்வதற்காக தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story