கோபி அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பரிதாப சாவு
கோபி அருகே லாரியும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் விவேக்குமார்(வயது 22). இவர் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அதே ஊரை சேர்ந்த குப்புராஜ் மகன் மதன்குமார்(18). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். விவேக்குமாரும், மதன்குமாரும் நண்பர்கள் ஆவர்.
இவர்கள் 2 பேரும் நேற்று காலை பண்ணாரி கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு பகல் 11 மணிக்கு மோட்டார்சைக்கிளில் கோபிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை விவேக்குமார் ஓட்டினார். மதன்குமார் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.
2 பேர் சாவு
கோபி அருகே போடிசின்னாம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே பால் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் விவேக்குமாரும், மதன்குமாரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.
இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story