குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு: விசாரணையில் புதிய தகவல்கள்


குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 21 பேர் உயிரிழப்பு: விசாரணையில் புதிய தகவல்கள்
x
தினத்தந்தி 31 March 2018 4:30 AM IST (Updated: 31 March 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தில், மலையேற்றம் சென்றவர்கள் கொழுக்குமலைக்குதான் சென்றார்கள் என்பது வனத்துறையினருக்கு முன்கூட்டியே தெரியும் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்று விட்டு திரும்பி வந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து சிலர் இறந்ததால் உயிர் இழப்புகள் 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அதுல்யா மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா கடந்த 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தேனி மாவட்டத்தில் விசாரணை நடத்தினார். விபத்து நடந்த ஒத்தமரம் பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு, கொழுக்குமலை வரை சென்று பின்னர், டாப்ஸ்டேஷனில் இருந்து குரங்கணிக்கும் மலையேற்ற பாதை வழியாக நடந்து வந்து ஆய்வு செய்தார். இதுதொடர்பாக சுமார் 73 பேரிடம் அவர் வாக்குமூலம் வாங்கி உள்ளார்.

தீ விபத்து நடந்த போது, மலையேற்றம் சென்றவர்கள் முறையான அனுமதி வாங்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மலையேற்றம் சென்ற ஈரோடு குழுவை சேர்ந்த பிரபு என்பவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் சோதனை சாவடியில் இருந்த வன ஊழியரிடம் ஒரு நபருக்கு ரூ.200 வீதம் செலுத்தி அனுமதி பெற்று சென்றதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் வன ஊழியர் ஜெய்சிங் என்பவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், மலையேற்றம் சென்றவர்கள் டாப்ஸ்டேஷனுக்கு அனுமதி பெற்றுவிட்டு கொழுக்குமலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு செல்வதற்கும், டாப்ஸ்டேஷன் செல்வதற்கும் ஒரே மலைப்பாதையை பயன்படுத்த முடியாது. அவை தனித்தனி மலையேற்றப் பாதையாக உள்ளன.

இதனால் வனத்துறையினருக்கு மலையேற்றக்குழுவினர் கொழுக்கு மலைக்கு செல்வது முன்கூட்டியே தெரியும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுபோன்ற கேள்விகளுடன் விசாரணை அதிகாரி கடந்த 23-ந்தேதி வாக்குமூலம் பெற்றார். இதில் பலரும் வாக்குமூலம் அளித்து இருந்தனர்.

அதில் கொழுக்குமலை தேயிலை தோட்ட அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தில், ‘காட்டுத்தீ பரவுவதால் மலையேற்றக் குழுவினர் மீண்டும் கொழுக்குமலைக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று வன ஊழியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை அதிகாரி விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், கொழுக்குமலைக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர். இவர் களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதாக எந்த ஆவணங்களும் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், பல ஆண்டுகளாக அனுமதியின்றி மலைப்பாதையில் மலையேற்றம் செல்ல எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? என்றும் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை அதிகாரி கேட்டுள்ளார்.

இதுவரை நடந்துள்ள விசாரணையில், பல ஆண்டுகளாக கொழுக்குமலைக்கு சுற்றுலா பயணிகள் மலையேற்றம் சென்றுள்ளதும், கடந்த 11-ந்தேதி நடந்த தீ விபத்தில் சிக்கிய மலையேற்றக் குழுவினரும் வனத்துறையினருக்கு தெரிந்தே மலையேற்றம் சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வனத்துறையில் மேலும் சிலர் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணை அதிகாரி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story