ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஆதிவாசி மக்கள் கல்வி அறிவு பெற வேண்டியது அவசியம் - ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ்


ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஆதிவாசி மக்கள் கல்வி அறிவு பெற வேண்டியது அவசியம் - ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ்
x
தினத்தந்தி 31 March 2018 4:15 AM IST (Updated: 31 March 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஆதிவாசி மக்கள் கல்வி அறிவு பெற வேண்டியது அவசியம் என்று ஊட்டியில் நடந்த முகாமில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேசினார்.

ஊட்டி,

ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து தோடர் இன மக்கள் வாழும் கிராமத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ஹூலுவாடி ரமேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பழங்குடியின மக்கள் நடனம் ஆடி நீதிபதிகள், அதிகாரிகளை வரவேற்றனர். பின்னர் நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பேசியதாவது:-

பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் நீங்கள் வாழக்கூடிய பகுதியை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும். வனத்தில் மரங்கள் இருந்தால் தான் மழை கிடைக்கும். இதன் மூலம் குடிநீர் அதிகமாக கிடைக்கும். பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்களுக்கு உதவ வருவாய், ஆதிதிராவிட மற்றும் சமூக நலம், கல்வி, சுகாதாரம் உள்பட 20 துறைகள் செயல்பட்டு வருகின்றன. ஏழ்மை நிலையில் இருந்து மேம்பட பழங்குடியின, ஆதிவாசி மக்கள் கல்வி அறிவு பெறுவது முக்கியம்.

ஆதிவாசி மக்கள் வாழும் பகுதியில் குடிநீர், சாலை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும். ஆதிவாசி மக்களை மிரட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் மட்டும் போதாது.

வாழ்வதற்கு தேவையான வீடுகளும் கட்டி கொடுக்க வேண்டும். ஆதிவாசி மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்க அரசு துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு (ஆதிவாசி மக்களுக்கு) சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்.

சமூக நீதி, ஊராட்சி சட்டம், அரசியல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை பெற முடியும். நிலம் மற்றும் சாதி சான்றிதழ்கள் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை ஆதிவாசி மக்கள் அணுகி உதவி பெறலாம்.

வழக்குகள் இருந்தால் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு பெற முடியும். உங்களில் ஒருவர் கல்வி பயின்று நல்ல பணிக்கு சென்றால் அந்த குடும்பம், கிராமம், அப்பகுதி மக்கள் முன்னேற்றம் பெற வாய்ப்பு ஏற்படும். எனவே பழங்குடியின மற்றும் ஆதிவாசி மக்கள் எதிர்கால சந்ததியினரின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் பேசியதாவது:-

பழங்குடியின மக்களை தேடி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு இருப்பது பல அர்த்தம் உள்ளது. சட்ட விழிப்புணர்வு மட்டுமின்றி நீங்கள் தரக்கூடிய விண்ணப்பத்தை பரீசிலித்து அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்கள் தங்களுடைய கிராமம் மற்றும் வனப்பகுதியை மிகவும் பாதுகாக்க வேண்டும். ஒருசிலர் தூண்டுதலால் இயற்கை வளம் பாதிக்கப்படும். இத்தகைய செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

வனப்பகுதியில் வாழும் 1437 பேருக்கு தனி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 48 பழங்குடியின மற்றும் ஆதிவாசி அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் மட்டுமே மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற்று வனத்தில் உள்ள சிறு விளைபொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.

ஒருமாத காலத்துக்குள் பழங்குடியின, ஆதிவாசி சமுதாய மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் கூட்டு தொழில் செய்ய வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. 48 பனியர் இன மக்களுக்கு வீடுகள் கட்டவும், புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி வடமலை, மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன், மாவட்ட சட்ட உதவி மைய நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, தமிழ்நாடு சட்ட ஆணைய உறுப்பினர் நசீர் அகமது, வக்கீல்கள் ரேவதி, நந்தகுமார் உள்பட பழங்குடியின, ஆதி வாசி மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story