விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் உடல் சிதறி சாவு


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் உடல் சிதறி சாவு
x
தினத்தந்தி 31 March 2018 4:15 AM IST (Updated: 31 March 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். இன்னொருவர் கதி என்ன என்பது தெரியவில்லை.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தில் விருப்ப ஓய்வு பெற்ற போலீஸ்காரர் முருகேசனுக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையுடன், பட்டாசு தயாரிப்பு அறைகளும் உள்ளன.

இங்கு நேற்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் பணிகள் தொடங்கின. அப்போது மருந்து கலக்கும் அறையில் மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டதால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

மருந்து கலவை வெடித்துச் சிதறியதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது.

அந்த அறையில் வேலை செய்து கொண்டு இருந்த முத்தலாபுரத்தைசேர்ந்த முருகன் (வயது 40), பள்ளப்பட்டியை சேர்ந்த சந்திரன் (30) ஆகியோர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.

இ.குமாரலிங்காபுரத்தை சேர்ந்த தொழிலாளி இருளப்பன் (38) பலத்த காயங்களுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருளப்பனுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருந்து கலக்கும் அறையில் இருந்த மேல் ஆமத்தூரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (27) என்பவரை காணவில்லை. அவர் காயங்களுடன் தப்பி ஓடினாரா அல்லது உடல் சிதறி இடிபாடுகளுக்குள் சிக்கினாரா என்று தெரியவில்லை.

மீட்பு படையினர் இடிபாடுகளை அகற்றியபோது அங்கு சிறிய உடல் துண்டுகள் தான் கிடந்தன. அவற்றை சேகரித்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வெடி விபத்தில் இறந்த இருவரின் உடல்களும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வெடி விபத்து நடந்த இடத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தீயணைப்பு படையினர் வெடி விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆமத்தூர் போலீசார் இந்த வெடி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story