நாட்டில் நல்ல சிந்தனையும் செயல்பாடும் இல்லாமல் ஜனநாயகம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது - பழ.நெடுமாறன்


நாட்டில் நல்ல சிந்தனையும் செயல்பாடும் இல்லாமல் ஜனநாயகம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது - பழ.நெடுமாறன்
x
தினத்தந்தி 31 March 2018 4:15 AM IST (Updated: 31 March 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் நல்ல சிந்தனையும் செயல்பாடும் இல்லாமல் ஜனநாயகம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்று தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் சம்பை ஊற்று மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். முருகேசன் வரவேற்றார். தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நாட்டில் ஜனநாயகம் அழியும் நிலைக்கு வந்துவிட்டது. காரைக்குடி சம்பை ஊற்றில் நச்சு நீர் கலந்து நல்ல நீர் மாசுபடுவதைப்போல் நாட்டில் நல்ல சிந்தனையும் செயல்பாடும் இல்லாமல் ஜனநாயகம் அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது. கோவிலூர் பகுதி நீர்நிலைகளில் கலக்கும் ரசாயன கழிவுகளால் அங்கு பிறக்கும் குழந்தைகள் கூட ஊனமாக பிறக்கிறது. கண் மாயில் கலக்கும் கழிவுகளால் சுமார் 80ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுஉள்ளது.

அப்பகுதி மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கின்றனர். கோவிலூர் நிலை காரைக்குடிக்கும் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. பேபாலில் அன்று ஏற்பட்ட விஷவாயு கசிவு விபத்தால் இன்று வரை குழந்தைகள் ஊனமாகவே பிறக்கின்றன. மேலும் வெளியே தெரியாத நோயால் மக்கள் உருக்குலைந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் கடந்த 50ஆண்டுகளாக சூறையாடப்பட்டு வருகிறது. இன்றுவரை அதற்கு ஆளுவோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையும் மதிக்கவில்லை. அரசியல் சட்டத்தை காப்பதாக உறுதி கூறி பதவிப்பிரமாணம் எடுத்தவர்கள் அதை சிறிதும் மதிக்கவில்லை. அவர்களே மதிக்காதபோது நாம் ஏன் மதிக்க வேண்டும்.

இந்த நிலை நாட்டை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ தெரியவில்லை. காவிரி நீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஜீவதார உரிமைப்பிரச்சினை ஐரோப்பிய நாடுகளில் மக்கள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்ட தொழிற்சாலைகளை எல்லாம் தமிழ்நாட்டில் தொடங்குகின்றனர். இதனால் பேரழிவு தமிழ்நாட்டிற்கு காத்திருக்கிறது.

இவற்றையெல்லாம் அகற்ற நாம் ஒன்று பட்டு போராட வேண்டும். ரெயில், பஸ் ஓடக்கூடாது. மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ் மொழி குறித்து மத்திய அரசுக்கு புரியும். காவிரி நீர் பிரச்சினை தீர தமிழ்நாடும், கர்நாடகவும் இருநாடுகளாக செயல்படுவது போல் ஆளுவோரின் செயல்பாடுகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதய குமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரீப் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Next Story