காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, நாராயணசாமி உறுதி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு, நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 31 March 2018 5:00 AM IST (Updated: 31 March 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வது சம்பந்தமாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் தமிழக, புதுவை அரசுகள் அழுத்தம் கொடுத்தும் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த மாதம் புதுச்சேரி வந்தபோது பிரதமர் மோடியை நானும், அமைச்சர்களும் சந்தித்து பேசி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தோம்.

அதன்பின் புதுவையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு கடந்த 9-ந்தேதி கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கும் பிரதமரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கடந்த 26-ந்தேதி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை.

தற்சமயம் டெல்லி சென்று இருந்தபோது இந்த விவரங்கள் அனைத்தையும் மத்திய மந்திரி நிதின்கட்காரியிடம் கொடுத்துள்ளேன்.

மத்திய நீர்வளத்துறை செயலாளர், இணை செயலாளரை சந்தித்து காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்திய சட்டமன்ற தீர்மானம், அனைத்துக் கட்சி தீர்மானத்தை புதுவை அரசின் செயலாளரான அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. நேற்றுகூட (நேற்று முன்தினம்) டெல்லியில் காவிரி வழக்கில் புதுவை அரசு சார்பில் ஆஜரான வக்கீல்களுடன் இது தொடர்பாக ஆலோசித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்வது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். இந்த விஷயத்தில் எந்த விதத்திலும் எங்கள் அரசு பின்வாங்காது.

மத்திய அரசு மீது முதலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், பின்னர் தெலுங்கு தேசமும், இப்போது காங்கிரஸ் சார்பிலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக பாராளுமன்றம் நடைபெறவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசும் பதில் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் நேற்று பிற்பகலில் அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக பேசியது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கினார். 

Next Story