தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை


தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 31 March 2018 5:22 AM IST (Updated: 31 March 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை,

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் பெருவிழாவின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப் படுகிறது.

புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழன் என்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, பெரிய வியாழக்கிழமையான நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கும் நடந்தது. திருப்பலிக்கு பிறகு நற்கருணை இடமாற்ற பவனியும், ஆராதனையும் நடந்தது.

அதனை தொடர்ந்து நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து கொண்டு செல்லும்போதும், அதில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 வசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான ‘பைபிளில்’ கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனை நடந்தது.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள உலகமாதா தேவாலயத்தில் நேற்று காலை 7 மணிக்கு சிலுவை பாதை வழிபாடு நடந்தது. கிரேஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் சிலுவையை சுமந்தபடி சென்று 14 இடங்களில் சிலுவையை வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கடைசியில் சிலுவை பாதை உலக மாதா தேவாலயத்தை வந்தடைந்தது. அங்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை ஆற்காடு லுத்தரன் தேவாலயத்தில் ஆயர் குருநாதன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும், ஆராதனையும் நடந்தது. திருவண்ணாமலை சாரோனில் உள்ள தேவாலயத்திலும், தேனிமலையில் உள்ள ஏசு தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது.

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் இருந்து ஆலய பங்கு தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் சிலுவை பாதை வழிபாடு தொடங்கி மலை மாதா கோவில் சென்று அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கையில் சிலுவைகள் ஏந்தியப்படி சென்றனர்.

ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் தேவாலயங்களில் கூட்டு திருப்பலி, சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து, விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

Next Story