ஊருக்கு ஒரு உரத்தொழிற்சாலை


ஊருக்கு ஒரு உரத்தொழிற்சாலை
x
தினத்தந்தி 31 March 2018 11:00 AM IST (Updated: 31 March 2018 10:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நமது வாழ்க்கை முறையாக இருந்தபோது ஒவ்வொரு வீட்டிலும் குப்பைக்குழி இருந்தது. நம் முன்னோர் குப்பை குழியினை பாதுகாத்து பராமரித்து வந்தனர்.

 நாம் நவீன கலாசாரத்திற்கு மாறிய பின்னர் குப்பை குழியை மறந்துவிட்டோம். உபயோகித்து தூக்கியெறியும் பழக்கமும், பிளாஸ்டிக் பொருட்கள் வரவும் குப்பைகள் குவிய காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றன. சிறிய ஊர், பெரிய நகரம் என எங்கும் இதே நிலை தான். அரசாங்கம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து போட வேண்டும் என எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், பெரிய மாற்றம் நிகழ்ந்ததாக தெரியவில்லை. சில பேரூராட்சிகள் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும், தனியாகவும் குப்பைகளை திறம்பட கையாண்டு உரம் தயாரித்தல் பணியினை செய்கின்றன. ஆனால் சோபிக்கவில்லை. இதற்காக செலவழித்த தொகை விழலுக்கு இறைத்த நீரானது.

தூய்மை என்ற பெயரில் வீட்டினை சுத்தப்படுத்தி, நமது வீட்டை விட்டு குப்பைகள் போனால் போதும், குப்பைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டதுடன் நமது கடமை முடிந்தது என்ற மனோபாவம் தான் பரவலாக உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் மலைபோல் குவித்து வைத்துள்ள குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு எமனாக இருக்கிறது.

நாம் உருவாக்கிய குப்பைக்கு நாம் தான் பொறுப்பு என்ற மனோபாவம் வளர வேண்டும். எல்லாவற்றையும் அரசாங்கமே செய்யும் என்ற மனபோக்கும் மாற வேண்டும். வீட்டில் இருந்து குப்பை கொட்டும் முன் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுத்தாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும். நாம் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறோம். ஆம், பழைய காலம் போல நாமே குப்பைகளை உரமாக்காமல், இயற்கை உரத்திற்கு திண்டாடுகிறோம்.

வருகிற 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கவும், லாபத்தினை மூன்று மடங்காக்கவும் மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்கின்றன. இதற்கான திட்டங்களுடன் தூய்மை இந்தியா திட்டத்தையும் இணைத்தால் நல்ல பலன் கிடைக்கும். ஊரும் சுத்தமாகும். விவசாயிகளுக்கும் குறைந்த விலையில் இயற்கை உரம் கிடைக்கும். மண்வளமும் மேம்படும். வேலைவாய்ப்பும் உருவாகும். கிராம பொருளாதாரம் மேம்படும். இதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமாகும். இதெல்லாம் நடந்தால் ஊருக்கு ஒரு உரத்தொழிற்சாலை நிச்சயம் அமையும்.

-ஜெ.பொன்னரசு

Next Story