கல்விக்கடனை செலுத்த தமிழக அரசு கை கொடுக்குமா?


கல்விக்கடனை செலுத்த தமிழக அரசு கை கொடுக்குமா?
x
தினத்தந்தி 31 March 2018 11:30 AM IST (Updated: 31 March 2018 10:52 AM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளிய மாணவர்கள் கடந்த காலங்களில் உயர்கல்வி கற்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது வங்கிகள் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

கல்விக் கடன் திட்டத்தின் மூலம் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்துக்கு குறைவாக உள்ள நிலையில் அவர்கள் கல்விக் கடனுக்கு எந்த வித ஜாமீனும் தர வேண்டியது இல்லை என்றும், அவர்கள் பெறும் கல்விக்கடனுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின் கல்விக்கடன் பெற்றவர்களுக்கு அவர்கள் கல்விக்கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையினை மத்திய அரசே செலுத்தி விடும் என்றும் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

எனினும் உயர்கல்வி கற்று முடித்து வேலை கிடைக்காத நிலையில் பல ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கடனை செலுத்துவதற்கு திணறும் நிலை உருவானது. பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கூட கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பினை தனியார் நிறுவனங்களிடம் வழங்கும் நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனங்கள் கல்விக் கடன் வசூலில் கெடுபிடி காட்டியதால் ஏழை, எளிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவானது.

இதைத்தொடர்ந்து அரசு வங்கிகள் சமாதான் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் கடனை ஒரே தவணையில் திரும்பி செலுத்தினால் அவர்களுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவித்தன. இருந்த போதிலும் பல ஏழை, எளிய மாணவர்கள் கல்விக் கடனை திரும்ப செலுத்துவதற்கு தொடர்ந்து சிரமப்படும் நிலையே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசு மாணவர்களின் கல்விக்கடனை திரும்ப செலுத்துவதற்காக புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் ஒரு திட்டத்தின்படி கல்விக்கடன் பெறும் மாணவர்கள் படிப்பை முடித்த பின்னர் 4 ஆண்டுகளுக்குள் கல்விக்கடனை திரும்ப செலுத்த வேண்டும். இதில் முதல் ஆண்டில் கடன் தொகையில் 90 சதவீதத்தை அரசும், 10 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும்.

2-ம் ஆண்டில் 75 சதவீதத்தை அரசும், 25 சதவீதத்தை கடன் பெற்ற மாணவரும் செலுத்த வேண்டும். 3-வது ஆண்டில் 50 சதவீத தொகையை அரசும், 50 சதவீத தொகையை மாணவரும் செலுத்த வேண்டும். 4-வது ஆண்டில் 25 சதவீதத்தை அரசும், 75 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். இந்த கடன் தொகைக்கான வட்டியினை வங்கிகள் ரத்து செய்ய வேண்டும்.

மற்றொரு திட்டத்தின்படி திரும்பச் செலுத்த முடியாத நிலுவையில் உள்ள கடன் தொகையில் 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும்.

ரூ.4 லட்சத்துக்கு மேல் ரூ.9 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு 50 சதவீத தொகையை அரசு செலுத்தும். மீதமுள்ளதை மாணவர்கள் செலுத்த வேண்டும். விபத்து உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் பாதிப்பு அடைந்தாலோ அவர்களுக்கான கல்விக்கடன் தொகை முழுவதும் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும். ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்விக்கடன் பெற்ற மாணவர்களில் 80 சதவீதம் பேர் கல்விக்கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளதால் மாணவர்களின் குடும்பத்தினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தமிழகத்திலும் கேரள அரசை போல ஏழை, எளிய மாணவர்களுக்கு வங்கிக் கடனை திரும்ப செலுத்த புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டிலும் கல்விக்கடன் நிலுவைத்தொகை அதிகரித்து வரும் நிலையில் வங்கி நிர்வாகங்கள் கடன் தொகை வசூலிக்க பல்வேறு வழிமுறைகளை கையாள்வதால் ஏழை, எளிய மாணவர்களும், அவர்களின் குடும்பங்களும் கடும் சிரமங்களை சந்திக்கின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே, தமிழக அரசு இந்திய வங்கி குழுமத்துடன் ஆலோசனை நடத்தி ஏதாவது ஒரு வகையில் மாணவர்களின் கல்விக் கடனை திரும்ப செலுத்துவதற்கு உதவ முன்வர வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

-நெல்லை நாதன்


Next Story