டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சாவு


டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர்.

ஆம்பூர்,

ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 40). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோகிலா திருச்சி பகுதியை சேர்ந்தவராவார். பங்குனி உத்திரத்தையொட்டி கோகிலா தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக காரில் சென்றார்.

காரை ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். அங்கு சிறப்பு தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் திருப்பதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் கோகிலாவின் தந்தை முருகேசனும் (59) உடன் வந்தார்.

கார் நேற்று காலையில் ஆம்பூரை கடந்து சின்னகொம்மேஸ்வரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி டேங்கர் லாரிக்குள் புகுந்து சிக்கி கொண்டதில் அப்பளம் போல் நொறுங்கியது. கார் மோதிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். டிரைவர் பிரேம்குமார், ராஜலிங்கம், அவரது மனைவி கோகிலா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் பிரேம்குமார் இறந்து விட்டார்.

ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவி கோகிலாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story