பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து திருப்பூண்டி கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் சாகுபடி செய்த சம்பா பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து 2016-2017-ம் ஆண்டுக்கு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அனைத்து ஒன்றியங்களிலும் வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குட்பட்ட திருப்பூண்டி, காமேஸ்வரம், காரப்பிடாகை தெற்கு, வடக்கு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 2016-2017-ம் ஆண்டுக்கான பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து நேற்று கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்தலுக்கான தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பு மனு பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகள் நேற்று காலை வங்கியில் வந்து காத்திருந்தனர். அப்போது திருப்பூண்டி, காமேஸ்வரம், காரப்பிடாகை தெற்கு, வடக்கு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திடீரென வங்கிக்குள் நுழைந்து 2016-2017-ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், உடனே விடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரியும், அதுவரை கூட்டுறவு வங்கி தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறியும் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் கார்த்திகேயன், கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி, நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 15 நாட்களுக்குள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story