பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில் தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 1 April 2018 4:00 AM IST (Updated: 1 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் தாயார் சன்னதியில் 29-ந்தேதி மாலை நடந்தது. நேற்று முன்தினம் வெண்ணெய்தாழி உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் காலை 5.30 மணிக்கு ரதாரோஹன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து தேரை 11 மணிக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் சஞ்சீவிராயர் கோவில் தெரு, தெற்குத்தெரு, அய்யப்பன் கோவில் வழியாக அசைந்து ஆடி வந்தது. அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர். தேர் மதியம் 1 மணி அளவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டது.

தேரோட்டத்தின் போது வழி நெடுகிலும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில், சென்னை திருமமிசை ஆழ்வார் திருத்தல பட்டாச்சாரியார் திரி விக்ரமன், துணை பட்டாச்சாரியார் ரகுராமன் பட்டாச்சாரியார் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து சீர்வரிசைகளை ஏற்று சிறப்பு வழிபாட்டை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு தேர் கடைவீதி மற்றும் சஞ்சீவிராயர் கோவில் தெரு வழியாக இழுத்து வரப்பட்டு மாலை 6 மணிஅளவில் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. தேர் நிலைநின்ற பின்பு தீர்த்தவாரியும், வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் கோவில் திருப்பணிக்குழு பொறுப்பாளர் ராஜா பழனியாண்டிபிள்ளை, செயலாளர் ராமலிங்கம் செட்டியார், கோவில் நிர்வாக அலுவலர் மகேஸ்வரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரதிருவிழா 10-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) துவாதச ஆராதனையும், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) திருமஞ்சன உற்சவம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும், 3-ந்தேதி மட்டையடி விழா மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவம், 4-ந்தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சியும், இரவு விடையாற்றி விழாவும் நடக்கிறது. 7-ந்தேதி திருத்தேர் 8-ம் திருவிழா பெருமாள் ஏகாந்தசேவையுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு அடைகிறது. 

Next Story