நெல்லையில் மேலும் ஒரு விசாரணை கைதி சாவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தல்


நெல்லையில் மேலும் ஒரு விசாரணை கைதி சாவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 April 2018 2:30 AM IST (Updated: 1 April 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு கைதியும் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை,

நெல்லையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேலும் ஒரு கைதியும் பரிதாபமாக இறந்தார். அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணை கைதிகள்

பாளையங்கோட்டை அருகே நடந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக நடுவக்குறிச்சியை அடுத்த வாகைக்குளத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 23), அம்பை அருகே கோடாரங்குளத்தை சேர்ந்த முருகேசன் (26) மற்றும் மானூர் அருகே உள்ள மதவகுறிச்சியை சேர்ந்த கண்ணம்மா ஆகிய 3 பேரையும் சிவந்திபட்டி போலீசார் கைது செய்தனர்.

இதில் கண்ணம்மாவை நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் ஆகிய 2 பேரையும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் உடலில் எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் இருந்ததால், சிறையில் அடைக்க மறுத்துவிட்டனர். மருத்துவ சிகிச்சை அளித்து, அதன் பிறகு அழைத்து வருமாறு சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.

2 பேரும் சாவு

இதையடுத்து போலீசார், மாணிக்கராஜ் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 2 நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முருகேசன் நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணிக்கராஜூம் நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மாணிக்கராஜின் தந்தை பட்டுராஜ், தாய் பூரணம் மற்றும் உறவினர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் மாணிக்கராஜ் உடலை பார்த்து கதறி அழுதனர். போலீசார் தாக்கியதால்தான் மாணிக்கராஜ் இறந்துள்ளார். எனவே அவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதன்பின்னர் மாணிக்கராஜ் உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உதவி போலீஸ் கமிஷனர்கள் மாரிமுத்து, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தந்தை கதறல்

இதுகுறித்து மாணிக்கராஜின் தந்தை பட்டுராஜ் கூறியதாவது:-

என்னுடைய மகன் மாணிக்கராஜ் மற்றும் முருகேசன், கண்ணம்மா ஆகியோரை கடந்த 27-ந் தேதி போலீசார் பிடித்தனர். 28-ந் தேதி போலீசார் மாணிக்கராஜை எங்களது வீட்டுக்கு அழைத்து வந்தனர். நகை ஏதும் வீட்டில் உள்ளதா? நகை அடகு ரசீது உள்ளதா? என்று தேடிப்பார்த்தனர். அப்போது மாணிக்கராஜ் நல்ல உடல் நிலையில் தான் இருந்தான். 29-ந் தேதி மாணிக்கராஜ் உள்ளிட்டோரை சிறையில் அடைப்பதற்காக என்னை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். நான் அங்கு சென்ற போது 3 பேரும் போலீஸ் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் 4 போலீசார் கொண்ட குழுவினர் மாணிக்கராஜையும், மற்றொரு குழுவினர் முருகேசனையும் போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதிக்கு தனித்தனியாக அழைத்துச் சென்றனர்.

அங்கு சேர்கள் மற்றும் இரும்பு கம்பிகளையும் போலீசார் எடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் 2 பேரும் கதறும் சத்தம் கேட்டது, அது குறித்து நான் கேட்ட போது போலீசார் என்னை மிரட்டி அங்கிருந்து ஓடிவிடுமாறு விரட்டினார்கள். அதன் பிறகு ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் 2 பேரும் இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கு வந்து பார்த்தேன். ஆனால் என்னுடைய மகன் அதன் பிறகு பேசவில்லை, தற்போது உயிர் பிரிந்து விட்டது. இதற்கு காரணமான போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பட்டுராஜ் கண்ணீர் மல்க கூறினார்.

Next Story