கண்டலேறு அணை தண்ணீர் நிறுத்தப்பட்டதால் குறைந்து வரும் பூண்டி ஏரி நீர்மட்டம்
கண்டலேறு அணை தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
அதன்படி கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கண்டலேறு அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கடந்த 26-ந் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் பூண்டி ஏரிக்கு 2,280 மில்லியன் கனஅடி தண்ணீர் கிடைத்தது.
நீர் மட்டம் குறைந்தது
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடவேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29.58 அடியாக பதிவானது. 1,664 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலமாக வினாடிக்கு 360 கனஅடி தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 18 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 26-ந்தேதி ஏரியின் நீர் மட்டம் 30.85 அடியாகவும், நீர் இருப்பு 1,794 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. 4 நாட்களில் ஏரியின் நீர் மட்டம் 1.27 அடி குறைந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரத்து நின்று போனதால் பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story