பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாததை கண்டித்து பயணிகள் சாலை மறியல் போராட்டம்


பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாததை கண்டித்து பயணிகள் சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடாததை கண்டித்து துறையில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையூர்,


கரூரை சேர்ந்தவர் சந்திரா (வயது 45). இவர் தனது உறவினர்கள் 15 பேருடன் கரூரில் இருந்து துறையூருக்கு ஒரு தனியார் பஸ்சில் வந்தார். கரூரில் பஸ் ஏறும்போது, கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் துறையூர் தீரன் நகரில் எங்களை இறக்கி விடவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது, அவர்களும் இறக்கி விடுவதாக கூறினார்களாம்.

ஆனால் துறையூர் அருகே பஸ் வந்ததும், பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீரன்நகரில் பஸ் நிற்காமல் துறையூர் முசிறி பிரிவு ரோட்டில் நிறுத்தி சந்திரா உள்ளிட்டவர்களை இறக்கி விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இங்கு இருந்து தீரன்நகருக்கு 2 கிலோ மீட்டர் தூரம் எப்படி நடந்துசெல்வோம்? என்று கேட்டுள்ளனர். அதற்கு கண்டக்டரும், டிரைவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் தனியார் பஸ்சை சிறைபிடித்தனர். அதுமட்டுமின்றி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சியில் இருந்து துறையூருக்கு வந்த பஸ்களும், துறையூரில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களும், கரூரில் இருந்து துறையூர் வரும் பஸ்களும் மற்றும் நாமக்கல்லில் இருந்து வந்த பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்த புறவழிசாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது போன்று வழக்கமாக நடப்பதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், பஸ்களை அந்தந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் வலியுறுத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story