திட்டங்களை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சியினர் இடையூறு செய்கிறார்கள், அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு


திட்டங்களை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சியினர் இடையூறு செய்கிறார்கள், அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 April 2018 4:15 AM IST (Updated: 1 April 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சியினர் இடையூறுகளை செய்து வருகிறார்கள் என்று அமைச்சர் கந்தசாமி குற்றம் சாட்டினார்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியின் 76-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளித்துணை ஆய்வாளர் குமார் வாழ்த்தி பேசினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராமப்புற பள்ளி அளவில், இப்பள்ளி மாநில அளவில் சாதனை படைத்திருப்பது சிறப்பான விஷயம். நமது மாநிலத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் திகழ வேண்டும் என்பதற்காக அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், பெற்றோர்களின் துணை இருக்க வேண்டும். ஏம்பலம் தொகுதி மக்களின் கனவு லட்சியமாக, கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா தலமாக மாற்றுவது. கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் 10 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதி கொண்ட திருமண மண்டபம் அமைப்பது, பனித்திட்டு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய திட்டங்களை நிறைவேற்ற கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு, திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அடுத்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் அரசு திட்டங்களை நிறைவேற்றி முடிக்க தவறிவிட்டது.

கிருமாம்பாக்கத்தில் திருமண நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மனைபிரிவுகளாக்கி வழங்கிவிட்டனர். அதே இடத்தில் திருமண மண்டபம் கட்டி, ஊருக்கு பெருமை சேர்க்கப்படும். அங்கு மனைபட்டா பெற்றவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும். இதற்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், எதிர்கட்சியினர் அரசை செயல்படவிடாமல் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்.

என்.ஆர்.காங்., அரசு வெற்றி பெற்றபோது, நான் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் எனது பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். ஆனால், இன்றைக்கு தோல்வி அடைந்தவர்கள், திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

Next Story