பால்கர் பகுதியில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைது


பால்கர் பகுதியில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கைது
x
தினத்தந்தி 1 April 2018 3:55 AM IST (Updated: 1 April 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் பகுதியில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தேசியாவத காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

பால்கர்,

பால்கர் பகுதியில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக தேசியாவத காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். மேலும் பா.ஜனதா, சிவசேனா தலைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

10 பேர் மீது வழக்குப்பதிவு


பால்கரை சுற்றியுள்ள பகுதியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று வசாயில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த பால்கர் கிராமபுற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மஞ்சுநாத் சிங்கே மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜ் திலக் ரோஷன் ஆகியோர், பால்கர் மாவட்ட போலீசில் கட்டுமான அதிபர்களை மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சி பிரமுகர்கள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கைது

மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வசாய்-விரார் பகுதி தலைவர் கோவிந்த் குஞ்சல்கரை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாகவும் அவர்கள் கூறினர். இதுதவிர பா.ஜனதா யுவ மோர்ச்சாவின் மாவட்ட தலைவர் அனில் சிங் மற்றும் சிவசேனா கட்சியின் முன்னாள் மாவட்ட துணை தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான தனஞ்செய் காவ்டே ஆகியோரை வலைவீசி தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பால்கர் பகுதியில் கட்டுமான அதிபர்களிடம் அவர்களது கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்திவிடுவோம் என மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story