மது விற்கும் மங்கை


மது விற்கும் மங்கை
x
தினத்தந்தி 1 April 2018 9:46 AM IST (Updated: 1 April 2018 9:46 AM IST)
t-max-icont-min-icon

மது விற்பனை செய்யும் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்த மது பாட்டிலை கேட்டு பணத்தை நீட்டுகிறார்கள்.

து விற்பனை செய்யும் அந்த கடையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆளாளுக்கு தங்களுக்கு பிடித்த மது பாட்டிலை கேட்டு பணத்தை நீட்டுகிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு பில்லையும், பாட்டிலையும் சேர்த்து கொடுக்கிறார், சஜிதா சஜீவ். பளிச்சிடும் உடையோடு நெற்றியில் செந்தூரம் மின்ன உற்சாகமாக இவர் வேலை பார்ப்பதால் அந்த கடையில் மது விற்பனையும் அதிகரித்திருக்கிறது. தொடக்கத்தில் சில நாட்கள், ‘நம்ம குடும்பத்தில் உள்ள பொண்ணு மாதிரி இருக்கிறாங்க.. இவங்ககிட்டே எப்படி பிராண்டி கொடுங்க.. விஸ்கி கொடுங்கன்னு கேட்கிறது..’ என்று சிலர் தயங்கியிருக்கிறார்கள். இப்போது தயக்கம் விலகி, ‘ஆண் என்ன பெண் என்ன எல்லோரும் ஒரே மாதிரிதான்.. அவங்க வேலையை அவங்க பார்க்கிறாங்க.. நம்ம பணத்தை கொடுத்து வாங்கிட்டு போயிட்டிருக்கவேண்டியதுதான்..’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். சஜிதாவுக்கும் மது விற்கிறோம் என்ற தயக்கம் எதுவும் இல்லை. தனது வேலையை சிறப்பாக செய்வதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.

கேரள அரசாங்கத்தின் சார்பில் மது விற்கும் கடையில் வேலைபார்க்கும் முதல் பெண் சஜிதா. ஆலப்புழையை சேர்ந்த இவர், அங்கு தைக்காட்டுச்சேரி என்ற இடத்தில் இருக்கும் மதுக் கடையில் வேலை செய்கிறார்.

“இன்று பெண்கள் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்களிலும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதுபோல் இதுவும் ஒரு வேலை. இந்த வேலையை நான் மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருக்கிறேன். குடும்பத் தலைவியாக நான் உண்டு, வீடு உண்டு என்றிருந்தேன். இப்போது ஊடகங்களில் என் முகம் வந்துவிட்டதால் நான்கு பேருக்கு தெரிந்த ஆளாகிவிட்டேன். இதில் என் மகனுக்கு ரொம்ப சந்தோஷம். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனிடம் அவளது டீச்சர் என்னைப் பற்றி விசாரிக்கிறாராம். என் மகள் சஞ்சனா எல்.கே.ஜி. படிக் கிறாள். என் கணவர் சஜீவ் கண்டெய்னர் லாரி ஓட்டுகிறார்..” என்று தனது குடும்பத்தை பற்றி சொல்கிறார்.

மது விற்கும் வேலையில் தான் சந்திக்கும் சுவாரசியங் களையும் சஜிதா சொல்கிறார்.

“நான் வேலை செய்யும் அரசாங்க மதுக் கடையில் வெளிநாட்டு மது வகைகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். முதலில் கடைக்குள் சென்றதும், வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. விதவிதமான மது பாட்டில்களை ஆர்வமாக பார்த்தேன். என்னை பார்த்ததும் முதலில் சில வாடிக்கையாளர்கள் மது வாங்க தயங்கினார்கள். அந்த மது இருக்கிறதா? இந்த மது இருக்கிறதா? என்று ஒன்றுக்கொன்றை கேட்டு தடுமாறினார்கள். சிலர் ‘அக்கா உங்கள் போட்டோவை பேப்பரில் போட்டிருக்கிறார்கள். பார்த்தோம்.. ரொம்ப மகிழ்ச்சி’ என்றார்கள். ஒரு சிலர் நைசாக நழுவியும் போய்விடுவார்கள். நான் கடந்த ஜனவரி மாதம் இந்த வேலையில் சேர்ந்தேன். முன்பெல்லாம் மது வாங்க ஒரு கியூவும் , என்னை பார்த்துவிட்டு செல்ல இன்னொரு கியூவும் இருந்தது. சும்மாவே நின்று அவர்கள் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு போய்விடுவார்கள். இப்போதுதான் அந்த கூட்டம் குறைந்திருக்கிறது” என்கிறார், சஜிதா.

இவருக்கு வெளிநாட்டு மது வகைகளின் பெயர்கள் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறது. எப்படி என்றால், இவரது தந்தை மோகனன் ஆலப்புழை பகுதியில் உள்ள மதுக்கடை யில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். இவர் மூலம் மது பிராண்டுகளின் பெயர்கள் சஜிதாவுக்கு தெரிந்திருக்கிறது. வேலையில் இருக்கும்போதே மோகனன் இறந்துவிட்டார். அதனால்தான் அந்த வேலை சஜிதாவுக்கு கிடைத்திருக்கிறது.

“வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் நான் சற்று தடுமாறத்தான் செய்தேன். மதுவின் குறியீட்டு எண் தெரிந்தால்தான் பில் போட முடியும். அதுபோல் வாடிக்கையாளர்கள் கேட்ட உடன் விலையை சொல்லவும், பணத்தை வாங்கிக்கொண்டு கணக்கு பார்த்து மீதியை கொடுக்கவும் வேண்டியிருந்தது. இரண்டொரு நாட்களில் அந்த பதற்றம் நீங்கி தெளிவாகிவிட்டேன். இப்போது மின்னல் வேகத்தில் வேலையை பார்ப்பேன்.

குடித்துவிட்டு மீண்டும் மது வாங்க சிலர் வருவார்கள். அப்போது அங்கே நிற்பவர் களுக்குள் அடிதடி நடக்கத்தான் செய்யும். முதலில் அதை பார்த்து கொஞ்சம் பயப்படத்தான் செய்தேன். நான் புதிதாக வந்த பெண் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்னிடம் யாரும் மோசமான வார்த்தைகளை பிரயோகித்ததில்லை. என் வீடும் இந்த பகுதியில்தான் இருக்கிறது. அதனால் எனக்கு பயம் எதுவும் இல்லை. நான் இந்த வேலைக்கு சேர்ந்த புதிதில் தோழிகள், ‘இந்த வேலையையா பார்க்கப்போகிறாய்?’ என்று கேட்டார்கள். இப்போது அவர்களும் இந்த வேலையை புரிந்துகொண்டு எனக்கு உற்சாகம் தருகிறார்கள்..” என்று மகிழ்ச்சியாக சொல்கிறார், சஜிதா.

Next Story