ஐந்து நாள் அசுர பயணம்


ஐந்து நாள் அசுர பயணம்
x
தினத்தந்தி 1 April 2018 11:15 AM IST (Updated: 1 April 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் மாநிலத் திலுள்ள லே பகுதியை மோட்டார் சைக்கிள்களில் 129 மணி நேரத்தில் சென்றடைந்து சாதனை படைத்திருக்கிறார்கள் இரு பெண்கள்.

ன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் மாநிலத் திலுள்ள லே பகுதியை மோட்டார் சைக்கிள்களில் 129 மணி நேரத்தில் சென்றடைந்து சாதனை படைத்திருக்கிறார்கள் இரு பெண்கள். இது பெண்கள் மேற்கொண்ட விரைவான மோட்டார் சைக்கிள் பயணமாக அமைந்துள்ளது. சாதனை பயணமாக லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. அந்த பெண்களின் பெயர்கள் அம்ருதா காசிநாத் மற்றும் சுப்ரா ஆச்சார்யா.

‘‘குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடைந்துவிட வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் நாங்கள் செய்துகொள்ளவில்லை. அதுபற்றிய திட்டமிடலும் எங்களுக்குள் தோன்றவில்லை. ஐந்து நாட்கள்தான் எடுத்துக்கொண்டோம். இதை எங்களால் நம்பமுடியவில்லை’’ என்கிறார், அம்ருதா.

பெண்கள் தனியாக பயணம் மேற்கொள்ளக்கூடாது என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதே இவர்களுடைய பயண நோக்கம். ‘‘பயணங்களின்போது பெண்கள் ஆண் களையே சார்ந்திருக்க வேண்டியதில்லை. தங்களால் எல்லா சவால் களையும் எதிர்கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும்’’ என்கிறார் அம்ருதா.

பெங்களூருவை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க பயிற்சிகளும் பெற்றிருக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை மோட்டார் சைக்கிளிலேயே வலம் வந்திருக்கிறார்கள். பூடான், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு மங்கோலியா செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள். தங்கள் பயணத்தின்போது தூங்குவதில்தான் சிரமம் இருப்பதாக கூறுகிறார்கள்.

‘‘தினமும் 5 மணி நேரமாவது தூங்கிவிட வேண்டும் என்பதை கட்டாயமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் அதனை சீராக கடைப்பிடிக்க சிரமப்பட வேண்டியிருந்தது. உணவு மற்றும் கால நிலை மாற்றமும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றன’’ என்கிற சுப்ரா வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவதில் தீவிர கவனம் செலுத்துகிறார்.

இவர்கள் லே பகுதியை நெருங்கும் வேளையில் லடாக் அருகில் உள்ள டாங்லாங்லாவை கடந்தபோதுதான் கடும் சிரமங்களை சந்தித்திருக்கிறார்கள். பனிப்பொழிவும், மழைப்பொழிவும் அவர்களுடைய பயணத்திற்கு கடும் சவாலாக அமைந்திருந்திருக்கிறது.

‘‘டாங்லாங்லா பகுதியை கடந்தபோது எதிர்கொண்ட சிக்கல்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. பயணங்கள் நமது நாட்டை ஆழமான கண்ணோட்டத்தில் தெரிந்து கொள்ள உதவும். பெண்கள் பயணங்கள் மேற்கொண்டால் நமது நாடு எவ்வளவு பாதுகாப்பானது என்பது தெரியும். அதை உணவுபூர்வமாக நாங்கள் உணர்ந்திருக்கிறோம்’’ என்கிறார் அம்ருதா.

Next Story