கல்லூர் ஊராட்சியில் பாதியில் பணி நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடவேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்


கல்லூர் ஊராட்சியில் பாதியில் பணி நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடவேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 April 2018 3:00 AM IST (Updated: 2 April 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியன் கல்லூர் ஊராட்சியில் பாதியில் பணி நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை முழுமையாக மூடவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

தொண்டி,

திருவாடானை யூனியன் கல்லூர் ஊராட்சி மகாலிங்கபுரம் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் இப்பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாமல் கழிவுநீர் சாலையில் ஓடி தொற்றுநோய் ஏற்பட்டு வந்தது. இதனால் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மகாலிங்கபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் கட்ட ரூ1 லட்சத்து 95 ஆயிரம் மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் அடிப்படையில் திருவாடானை யூனியன் அலுவலக பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் இடத்தை அளந்து சென்றனர். ஆனால் சரியான அளவில் கால்வாய் கட்டாமல் பாதியிலேயே பணி நிறுத்தப்பட்டது

தற்போது சாக்கடை கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாகவும் மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் நடமாடவும் முடியவில்லை, குடியிருக்கவும் முடியவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி மகாலிங்கபுரம் பகுதியில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத சாக்கடை கால்வாயை உடனடியாக மூடவேண்டும் அல்லது சரியாக அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் குருசாமி கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.


Next Story