போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்தவர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்தவர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 4:45 AM IST (Updated: 2 April 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பாண்ட்ஸ் சிக்னல் அருகில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன்(வயது 55) வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது திருநீர்மலை சாலையில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை அவர் தடுத்து நிறுத்தி விசாரித்தார்.

அதில் மோட்டார் சைக் கிளை ஓட்டி வந்த நபர், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மோட்டார் சைக் கிளை தடுத்து நிறுத்தியதால் அந்த நபருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த நபர், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதனின் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ரங்கநாதன் நிலைதடுமாறினார்.

பின்னர் இதுபற்றி குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குடிபோதையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய நபரை பிடித்து போலீஸ்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குமரவேல் என்ற மருதுவேல் (44) என்பதும், சிட்லப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story