பஸ் நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பஸ் நிலையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 April 2018 4:00 AM IST (Updated: 2 April 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

மாங்காட்டில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில், வெள்ளஸ்வரர் கோவில் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவில் போன்றவை உள்ளது. இங்கு நாள் தோறும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அரசு மற்றும் தனியார் பஸ்களில் வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அப்போது மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து கொண்டு கூட்டம், கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். மாங்காட்டில் அம்மன், பெருமாள், சிவன் உள்ளிட்ட கோவில்கள் இருப்பதால் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் இருந்தபடியே இருக்கும்.

மாங்காட்டில் கோவில்களுக்கு வரும் பக்தர்களை சாலையின் ஓரம் சிறிது தூரத்திற்கு முன்பே இறக்கி விட்டு விடுகிறார்கள் அதனால் சிறியவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் நீண்ட தூரம் நடந்து வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது ஆனால் அந்த இடம் அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் அந்த திட்டம் கை விடப்பட்டது.

அதுமுதல் பஸ் நிலையம் அமைக்கும் பணி கானல் நீராகவே உள்ளது. அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரும் பஸ்கள் அனைத்தும் குன்றத்தூர்- குமணன் சாவடி செல்லும் சாலையின் ஓரம் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் பஸ் நிலையம் அமைந்தால் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்ல ஏதுவாக இருக்கும் அதுமட்டுமின்றி பஸ்சுக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழலும் தடுக்கப்படும்.

மேலும் பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் அங்கு சில கடைகள் உருவாகி மக்களின் வாழ்வாதாரமும் பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே மாங்காட்டில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story