கொலக்கம்பை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்


கொலக்கம்பை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 2 April 2018 3:30 AM IST (Updated: 2 April 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கொலக்கம்பை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

குன்னூர்,

குன்னூரை அடுத்த கொலக்கம்பை அருகே உள்ள மூப்பர்காடு ஆதிவாசி கிராமத்தில் கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. யானைகள் அங்குள்ள குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. யானைகள் முகாமிட்டு இருந்ததால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் ஊருக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் யானைகளை விரட்டியடித்தனர். பின்னர் யானைகள் சுல்தானா எஸ்டேட் பகுதியில் புகுந்து தொழிலாளர் குடியிருப்பை சேதப்படுத்தியது. வனத்துறையினர் விரட்டும் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று விட்டு மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது.

இந்த நிலையில் யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மானாரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி முன்பு நின்று இருந்தது. யானைகள் வருவதை பார்த்த போலீசார் சோதனை சாவடியை விட்டு வெளியேறினர். யானைகள் சோதனை சாவடிக்குள் நுழைய முயன்றன.

ஆனால் யானைகளால் உள்ளே செல்ல முடியாததால் சிறிது நேரம் அங்கேயே நின்று இருந்தன. அதன் பின்னர் மானார் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் சென்றது. யானைகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்ததை ஒருவர் வீட்டிற்குள் இருந்தபடி செல்போனில் படம் எடுத்தார்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, சில நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் முகாமிட்டு உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே உயிரிழப்பு ஏதேனும் ஏற்படும் முன்பு வனத்துறையினர் விரைந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Next Story