சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும், அர்ஜூன் சம்பத் பேட்டி


சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும், அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 2 April 2018 4:00 AM IST (Updated: 2 April 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பூரில் கூறினார்.

திருப்பூர்,

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் மாநில இணையதள ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக்கூட்டம் நேற்றுகாலை திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார். தலைமை இணையதள ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, காவிரி மேலாண்மை வாரியத்தை ஏற்க மாட்டோம் என்று அறிவிக்கிறார். அவர் மீது வழக்கு தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் உள்ளது. ஆனால் காவிரி நீரை கர்நாடக காங்கிரஸ் அரசு தர மறுக்கிறது. தி.மு.க. உடனடியாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி அறப்போராட்டம் நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியலை முன்னிறுத்தியும், திராவிட ஆட்சியை மாற்றவும் வருகிற சித்திரை மாதம் முழுவதும் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ராம ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும்.

ஒரு மாவட்டத்துக்கு ஒரு ரதம் வீதம் யாத்திரை நடத்தப்படும். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த ரத யாத்திரை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமர் சிலை, பட்டாபிஷேக காட்சிகள் இந்த ரதத்தில் இடம்பெறும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்.

இதுபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் புகுந்து கருத்துக்களை பரப்ப முயற்சி செய்து வருகிறது.

கமல்ஹாசனும் அந்த போராட்டத்துக்கு உறுதுணையாக செயல்படுகிறார். ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் கருத்தை வரவேற்கிறோம். ரஜினிகாந்த் கட்சியினர் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் ஆதரவு தெரிவிக்கப்படும். அவர் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story