தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் 31 பேர் கைது


தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் 31 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

அணைக்கட்டு,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் செல்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் முற்றுகை மற்றும் போராட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மாநில துணைப் பொது செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, சீனுவாசன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அணைக்கட்டு தாசில்தார் குமார் மற்றும் வருவாய்த்துறையினரும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

31 பேர் கைது

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது “உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றக்கூடாது” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அதில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் கஜேந்திரன், தலைவர் கோபால், சோளிங்கர் நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் சுதாகர் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story