காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகாசியில், அ.தி.மு.க. வினர் நாளை உண்ணாவிரதம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அழைப்பு


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகாசியில், அ.தி.மு.க. வினர் நாளை உண்ணாவிரதம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அழைப்பு
x
தினத்தந்தி 2 April 2018 4:30 AM IST (Updated: 2 April 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சிவகாசியில் நாளை நடைபெற விருக்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு திரண்டு வருமாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகாசி,

அமைச்சரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை எதிர்த்து தமிழகமெங்கும் நாளை( செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்திட வேண்டும் என அ.தி.மு.க. முடிவெடுத்துள்ளது. ஜெயலலிதா காவிரி பிரச்சினையில் நடத்திய இடைவிடாத சட்டப் போராட்டத்தின் விளைவாகத் தான் நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே தமிழக சட்டப்பேரவையில் இதற்கான சிறப்புத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 24.2.2018 அன்று சென்னை வந்த பிரதமரிடமும், 25.2.2018 அன்று தமிழகம் வந்த மத்திய நீர்வள மேம்பாட்டுத்துறை மந்திரி நிதின்கட்கரியிடமும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டுமென எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனுக்களை அளித்தனர்.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் போர்க்கோலம் பூண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதற்குப் பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று, தேவையற்ற காலதாமதத்தை உருவாக்கி வருகின்றது.

இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மிகச்சிறந்த சட்ட வல்லுனர்களைக் கொண்டு எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் இந்த மனு காலம் தாழ்த்துவதற்காகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி நீரை உரிய முறையில் பங்கீடு செய்துகொள்ள மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதையும் எடுத்துச் சொல்லி மத்திய அரசின் மனுவை அனுமதி நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி வருவதுடன், நாடாளுமன்றத்திலும் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலக்கெடு முடிவடைந்த பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத தனது செயலால் மத்திய அரசு தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்துள்ளது. இப்பிரச்சினையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மத்திய அரசுக்கு வெளிப்படுத்தும் வகையில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் விடுத்துள்ள உத்தரவினை ஏற்று சிவகாசி பஸ்நிலையம் அருகில் நாளை எனது தலைமையிலும், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன் முன்னிலையிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கழகத்தின் அனைத்து பிரிவுகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நமது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவும் அலைகடலென திரண்டு வருமாறு அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story