காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேசிய கொடியை எரித்த ஆசிரியர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேசிய கொடியை எரித்த ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 4:45 AM IST (Updated: 2 April 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தேசிய கொடியை எரித்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் புதுப்படையூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மதியரசன். இவருடைய மகன் பிரபு (வயது 34). இவர் சோழன் மாளிகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், அவர் பட்டீஸ்வரத்தில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியில் உள்ளார்.

இந்த நிலையில் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தேசிய கொடியை தீவைத்து எரித்து அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறியவாறு தேசிய கொடியை பிரபு தீவைத்து எரிக்கும் காட்சி உள்ளது.

கைது

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த சென்னை தனிப்பிரிவு போலீசார், பிரபுவை நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவரை சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story