தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராமமக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் போராட்டம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராமமக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2018 4:45 AM IST (Updated: 2 April 2018 3:22 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராமமக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் போராட்டம் நடத்தினார். அப்போது அவர், “புகைப்படம் எடுக்கும் ஆசையில் இங்கு வரவில்லை“ என்று ஆவேசமாக பேசினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி அ.குமரெட்டியபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து இந்த போராட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு போராட்டக்குழு அழைப்பு விடுத்தது. தொடர்ந்து நேற்று போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு கமல்ஹாசன் வந்தார். அங்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம்

இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் காலை 11.25 மணிக்கு அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அந்த மக்களோடு அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களிடையே கமல்ஹாசன் ஆவேசமாக பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் தமிழனாக உங்கள் மத்தியில் வந்து இருக்கிறேன். ஓட்டுக்காக வரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆனால் ஆட்சி நடக்கிறதா? என்பதே தெரியவில்லை. நான் உங்கள் உணர்வை மதித்து உங்களில் ஒருவனாக வந்து உள்ளேன். ஓட்டுக்காக வரவில்லை. ஆனால் நான் புகைப்படம் எடுக்கும் ஆசையில் வந்து இருப்பதாக இருவர் சொன்னதாக கேள்விப்பட்டேன். ஆயிரம் கேமிராக்கள் முன்பு நான் நின்று விட்டேன். புதிதாக கேமிராக்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை இல்லை. நான் மய்யத்தில் நிற்கிறேன்.

இங்கு உள்ள மக்கள் காசு கேட்கிறார்கள். அதனால்தான் போராடி வருவதாக கூறுகிறார்கள். ஆளுக்கு ரூ.5 கோடி தருவதாக 120 பேரிடம் பேரம் பேசியதாக கூறுகிறார்கள். அரசியல்வாதிகளுக்கு ரூ.8 ஆயிரம் கோடி கையூட்டு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இது நான் கேள்விப்பட்டது. மக்கள் வாழ்க்கையை அழித்து வியாபாரம் செய்ய வேண்டியது இல்லை என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

நானும் வியாபாரம் செய்கிறேன். அதற்கு என்று ஒரு நியாயம் இருக்கிறது. பிள்ளைகளை கொன்று, பிள்ளைக்கறி சாப்பிட்டால்தான் வியாபாரம் நடக்கும் என்றால், அந்த வியாபாரம் நடக்கக்கூடாது. அதனை சொல்லத்தான் நான் வந்து உள்ளேன்.

இந்த வேப்பமரக்காற்று எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து உள்ளது. நீங்கள் சுவாசிக்கும் விஷக்காற்றை விட, உங்கள் மூச்சு காற்று பட்ட இந்த வேப்ப மரக்காற்று எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. இந்த புத்துணர்வோடு, உங்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு உள்ளேன். உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களுக்கு பலம் சேர்க்கத்தான் இங்கு வந்து உள்ளேன். நாம் படிக்காதவர்கள் என்று நினைத்து ஆலை நிர்வாகம் தைரியமாக பொய் சொல்கிறது. நான் படிப்பறிவு இல்லாதவன்தான். ஆனால் இந்த அறிவை வைத்துதான் இத்தனை நாளாக பிழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அங்கிருந்து மதியம் 11.50 மணிக்கு அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story