மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 3:30 AM IST (Updated: 2 April 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.எஸ். சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்கக்கோரியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசு கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட துணை தலைவர் ராமராஜன், அம்மாபேட்டை பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கோபி அருகே உள்ள சிறுவலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுவலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.முருகன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் குமணன், வெள்ளியங்கிரி, தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் நேதாஜி, சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் காமராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பவானி நகர தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என அனைத்து கட்சி சார்பில் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ.நாகராஜன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நகர தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ஜெகநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொறுப்பாளா ஸ்ரீகுமார், மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொறுப்பாளர் சுராஜுதீன், தி.மு.க. நகர துணைச்செயலாளர் கண்ணம்மாள் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து கவுந்தப்பாடி நால் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பவானி ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி. துரைராஜ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

புஸ்சை புளியம்பட்டி பஸ் நிலையம் அருகில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு புளியம்பட்டி நகர தி.மு.க. செயலாளர் பி.ஏ.சிதம்பரம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், பவானிசாகர் ஒன்றிய முன்னாள் தலைவர் பி.கே.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இல்லியாஸ், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சுலைமான் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நம்பியூர் ஒன்றிய தி.மு.க சார்பில் நம்பியூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில், செந்தில்குமார், என்.சி.சண்முகம், நம்பியூர் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வேலுச்சாமி, அல்லாபிச்சை, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் டி.என்.பாளையத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

கோபி பஸ் நிலையம் அருகில் நேற்று தி.மு.க. மற்றும் அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். கோபி நகரச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் முருகன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், மாநில துணைத்தலைவர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி, டாக்டர் செந்தில்நாதன், தி.மு.க. நிர்வாகிகள் பிரபாகரன், கமலக்கண்ணன், விஜயகருப்பசாமி, விஷ்ணுசண்முகம், சுரேஷ்குமார், கார்த்திகேயன், சிவக்குமார், செந்தில்குமார் மற்றும் வக்கீல் நந்தகுமார் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஏ.எம்.சோபியாஷேக், துணை அமைப்பாளர் செபாஸ்தியான், தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் மகாலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி, முன்னாள் கவுன்சிலர் சந்திரமோகன் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் நகர தி.மு.க. சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் நகரச் செயலாளர் எஸ்.எல்.லிங்கண்ணன், தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராதாகிருஷ்ணன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story