காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் இன்று கடையடைப்பு போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் இன்று கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2018 3:30 AM IST (Updated: 3 April 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

ஊட்டி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. காலை 8 முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது.

இதேபோல் வணிகர்கள் சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, அண்ணா தொழிற்சங்க மாநில குழு பொறுப்பாளர் யு.ஆர்.கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல் நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம், ஊட்டி அனைத்து வணிகர் சங்கம், நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ சவர தொழிலாளர்கள் சங்கம் உள்பட அனைத்து சங்கங்கள் சார்பில் கடை யடைப்பு நடக்கிறது.

இது குறித்து உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது ஜாபர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப் படும். இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கூடலூர் சட்டமன்ற தொகுதி அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் ரசாக் கூறியதாவது:-

கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்ளப்படுகிறது. இதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story