கோவையில் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்டி, படுக்கையுடன் வந்த பொதுமக்கள்


கோவையில் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்டி, படுக்கையுடன் வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 April 2018 3:30 AM IST (Updated: 3 April 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முறையாக வீடுகளை ஒதுக்கக்கோரி பொதுமக்கள் பெட்டி, படுக்கையுடன் வந்து மனு அளித்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் போது கோவை குறிச்சி என்.பி. இட்டேரி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை மாநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கார்த்திக்கண்ணன், குனிசை ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் பெட்டி, படுக்கையுடன் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ள தாவது:-

குறிச்சி என்.பி. இட்டேரி வாய்க்கால் பகுதிகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிய 264 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் 200 குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது. இதுதவிர ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்காதவர்களுக்கும் கூட அந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இட்டேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக வீடுகளை ஒதுக்க வேண்டும். மேலும் ஆத்துபாலம் பால்சாமி நாயுடு வீதியில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் மாற்றிடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள சத்துணவு மையம் கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு குழந்தைகள் படிக்க சிரமப்படுகின்றனர். எனவே இந்த மையத்துக்கு உடனடியாக மின்சார வசதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது. இருகூர் பகுதியை சேர்ந்த பூபதிகண்ணன் அளித்த மனுவில், ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் சீட்டு நடத்தி ஏராளமானோர்களிடம் பண மோசடி செய்து உள்ளனர். எனவே இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

பல்லடம் விசைத்தறி சங்க செயலாளர் அப்புக்குட்டி (எ) பாலசுப்ரமணியம் தலைமையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோவை கலெக்டரிடம் நேற்று மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு கூலி உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போ டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் விசைத்தறி உரிமையாளர்கள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே விசைத்தறி உரிமையாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் , தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய கடன்கள் சுமார் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Next Story