காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும்கட்சி சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் தபால் அலுவலக நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் நாம் தமிழர் கட்சியினர் வேறு ஒருவழியாக தபால் அலுவலகத்துக்குள் புகுந்து, அலுவலக கதவை மூடி பூட்டு போட்டு, அதன்முன்பு அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்வதாகக்கூறி அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் கோஷமிட்டனர்.
வேலூர் தொகுதி செயலாளர் விக்னேஷ், இணையதள பொறுப்பாளர் கார்த்திகேயன், தொகுதி இணை செயலாளர் வெங்கடேஷ் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story