காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசும் புதுவையை வஞ்சித்து வருகிறது: முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசும் புதுவையை வஞ்சித்து வருகிறது: முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 April 2018 11:30 PM GMT (Updated: 2 April 2018 8:54 PM GMT)

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசும் புதுவையை வஞ்சித்து வருகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

மத்திய அரசு கடந்த மாதம் 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோட்டு அளித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இது குறித்து விவாதிக்க நேற்று மாலை ஜெயராம் ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் மற்றும் தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதியநீதிக்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை கடந்த மாதம் 29-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்து கவர்னர் கிரண்பெடிக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று அவர் கோப்பை திருப்பி அனுப்பிவிட்டார். மேலும், தேவைப்பட்டால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் அமைக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மீண்டும் கவர்னருக்கு கோப்பு அனுப்பினேன். ஆனால் அவர் பழைய நிலையையே வலியுறுத்தினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

இந்த நிலையில் புதுவை சட்டமன்ற அரசு கொறடா அனந்தராமன், சுப்ரீம் கோர்ட்டில் காவிரி கடைமடையான காரைக்கால் பகுதி விவசாயிகள் பாதிக்காமல் இருக்க, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தன்னிச்சையாக தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் இதர சட்ட நடவடிக்கைகளை புதுவை அரசு எடுப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, கருத்துகளை கேட்டேன். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால் சுப்ரீம் கோட்டை அணுகி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அதிகாரம் தந்துள்ளனர்.

தொடர்ந்து காரைக்கால் விவசாயிகள் நலன் கருதி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு விட்டுத்தராது. விவசாயிகளின் நலனுக்காக போராடவும் தயார்.

தமிழக அரசும் புதுவையை வஞ்சித்து வருகிறது. கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் பெற்றாலும் அதில் காரைக்கால் பகுதிக்கு உரிய பங்கு தண்ணீரை தமிழக அரசு தருவதில்லை. இது வேதனை அளிக்கிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை. காவிரி நதிநீர் விஷயத்தில் அவர்களின் நிலை என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் மக்கள் பிரதிநிதிகள் காவிரி விவகாரத்துக்காக தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் உள்ளதா? என்று கேட்ட போது, “தமிழகத்தில் ராஜினாமா செய்த பிறகு கேள்வி கேளுங்கள்” என்று கூறினார். 

Next Story